அதிமுக கொடி பொருத்திய காரில் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா.. அஞ்சலி செலுத்தும்போது "அழுகை"
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். இதற்காக அவர் அதிமுக கொடி பொருத்திய காரில் மெரினா கடற்கரை சென்றார். அப்போது, தொண்டர்கள் வாழ்க கோஷம் எழுப்பினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் பெங்களூர் சிறையிலிருந்த சசிகலா, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ரிலீசானார்.
எனவே அவர் அரசியலில் களமிறங்குவார் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், தமிழக சட்டசபைத் தேர்தலின்போது அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுக்கு பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். பின்னர் அதிமுக நிர்வாகிகள் சிலருடன் அவ்வப்போது சசிகலா தொலைபேசியில் பேசி வந்தார்.

சுற்றுப் பயணம்
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பேன். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து எனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வேன் என்று தெரிவித்திருந்தார்.

அதிமுக பொன் விழா
திமுகவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். கட்சியை உருவாக்கிய 50வது ஆண்டு பொன்விழா ஆண்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலடி எடுத்து வைக்க உள்ளது. இந்தநிலையில்தான், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று சசிகலா சென்றார். காலை 10.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து காரில் அவர் கிளம்பினார். 11.30 மணிக்கு முதலில் ஜெயலலிதா நினைவிடம் சென்றார். அங்கே மலர் தூவி அஞ்சலி செலுத்தியபோது சசிகலா அழுதுவிட்டார். கண்களை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டார். பின்னர் சமாதியை அப்படியே குனிந்து தொட்டு கும்பிட்டார். பின்னர் எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார். 4 வருடங்களுக்கு முன்பு சிறைக்கு சென்றபோது ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து விட்டு சசிகலா சென்றார். சிறையிலிருந்து அவர் திரும்பியபோது, பராமரிப்பு பணிகள் காரணமாக சசிகலாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே 4 வருடங்களுக்கு பிறகு இன்று சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் சென்றுள்ளார்.
Recommended Video

ஆதரவாளர்கள்
சசிகலாவிற்கு பெரும் வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். அவரது வீட்டில் மட்டுமில்லாது, கார் போகும் வழியெல்லாம் தொண்டர்கள் குவிந்து வாழ்க கோஷம் எழுப்பினர். பூங்கொத்துகளை கொடுக்க முண்டியடித்தனர். ஆனால் அவற்றை சசிகலா பெற்றுக்கொள்ளவில்லை. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் அவ்வாறு அறிவிப்பு வெளியிடவில்லை. மனதில் உள்ள பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைக்க வந்ததாக கூறிவிட்டு, காரில் ஏறிச் சென்று விட்டார்.

எம்ஜிஆர் நினைவு இல்லம்
இதேபோல நாளை காலை 10.30 மணியளவில் சசிகலா, சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்று எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கும் சசிகலா செல்கிறார்.

உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளன. எனவே இப்போது சசிகலா மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து அதிமுகவினரை சந்தித்தால் அது அந்த கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications