SBI தந்த ஷாக்.. இனி ஆன்லைனில் பண பரிமாற்றத்துக்கு சேவை கட்டணம் + ஜிஎஸ்டி.. இன்று முதல் அமல்.. லிமிட் இதுதான்
சென்னை: எஸ்பிஐ வங்கி சார்பில் இன்று முதல் IMPS எனும் உடனடி ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைகளுக்கு தனிக்கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்த உள்ளது.
நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(State Bank Of India or SBI) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் IMPS (Immediate Payment Service) சேவைகளுக்கு சேவை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிப்பதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த சேவை கட்டணம் + ஜிஎஸ்டி கட்டணம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.
ரூ.25,000 தான் லிமிட்
அதன்படி செல்போன் செயலி, இண்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தால் இந்த கட்டணம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.
எந்தெந்த பணபரிமாற்றத்துக்கு...
இந்த சேவை கட்டணம் + ஜிஎஸ்டி என்பது எஸ்பிஐயின் இண்டர்நெட் பேங்கிங், செல்போன் செயலி வழியிலான பணப்பரிமாற்றம் YONO செயலி வழியிலான பணப்பரிமாற்றத்துக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ரூ.25 ஆயிரத்துக்குள் பணப்பரிமாற்றம் செய்தால் சேவை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கிடையாது.
சர்வீஸ் சார்ஜ் + ஜிஎஸ்டி எவ்வளவு?
அதேவேளையில் ரூ.25,001 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.2 சேவை கட்டணமாகவும் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். அதேபோல் ரூ.1 லட்சத்து 1ல் இருந்து ரூ.2 லட்சம் வரையிலான பணப்பரிவர்த்தனைக்கு ரூ.6 சேவை கட்டணமாகவும் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.
அதன்பிறகு ரூ.2 லட்சத்து 1ல் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான பணப்பரிவர்த்தனைக்கு ரூ.10 சேவை கட்டணமாகவும் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வகைகளில் ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்யும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
யாருக்கு பாதிப்பு?
புதிய விதியை அறிந்து பணப்பரிமாற்றம் செய்வது நல்லது. இல்லாவிட்டால் சேவை கட்டணம் + ஜிஎஸ்டி தனியாக செலுத்த வேண்டியிருக்கும். அதேவேளையில் வங்கி கிளைகள் வழியாக செயல்படுத்தப்படும் பணப்பரிமாற்றத்துக்கு இது பொருந்தது. அதற்கு பழைய கட்டணங்களே பொருந்தும்.
இருப்பினும் ரூ.25 ஆயிரம் வரையிலான ஆன்லைன் பணப்பரிமாற்றத்துக்கு கட்டணம் விதிக்கப்படாததால் இது சாதாரண மக்களை பாதிக்காது என்று எஸ்பிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தினமும் பெரிய அளவிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களைச் செய்யும் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும்.
ஏன் இந்த கட்டணம்?
இந்த கட்டண உயர்வு டிஜிட்டல் சேவைகளைப் பராமரிப்பதற்கும், தொடர்ந்து தொய்வின்றி சேவைகளை வழங்கவதற்காகவும் ஏற்படும் செலவுகள சமாளிப்பதற்காகவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எஸ்பிஐ என்று வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவைப்பட்டால் NEFT அல்லது RTGS போன்ற மாற்று பணப் பரிமாற்ற வழிகளை பயன்படுத்தலாம் என்றும் எஸ்பிஐ அறிவுரை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications