தமிழ் முஸ்லிம்களின் முதன்மை கோரிக்கை.. 5 சிறைவாசிகள் ரிலீஸ்! அனைவரையும் விடுவிக்க சொல்லும் எஸ்டிபிஐ
சென்னை: நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் மீதம் உள்ளவர்களையும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தல்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 33 நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. சமீபத்தில் மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநாட்டிலும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி முதல் தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்நிலையில், பல நீண்ட போராட்டங்களின் விளைவாக அபுதாஹிர், ஹாரூண் பாஷா, சாகுல் ஹமீத், குண்டு ஜாஹிர், ஊம் பாபு ஆகிய 5 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விடுதலையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வரவேற்பதோடு, எஞ்சியுள்ள சிறைக்கைதிகளையும் தாமதிக்காமல் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கு பெரும் சிக்கலாக இருந்துகொண்டிருக்கும் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட அரசாணை (25/04/2022 G.O. (MS) No:205) பிரிவு 15-ஐ ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல், முஸ்லிம் சிறைக்கைதிகளின் பரோல் விடுப்புக்கு தடையாக இருக்கும் Tamil Nadu Suspension of Sentence Rules, 1982 சட்டவிதிகளில் 2022ல் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் குறுகிய கால பரோலில் உள்ள சிறைக் கைதிகளுக்கு, அரசால் நீண்ட பரோல் விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை என்பது முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டு கோரிக்கையாகும்.
இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, அந்த கோரிக்கையை பொது கோரிக்கையாக்கி, அதனை அரசு செயல்படுத்த காரணமாக இருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், மற்றுமுள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படும் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து குரலெழுப்பும், போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications