மேடை கிடைத்துவிட்டால் போதுமே.. தமிழை இழிவுப்படுத்துவதா? ஆளுநர் ரவியை வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை!
சென்னை: தமிழ் மொழியையும், தமிழர்களையும் இழிவுப்படுத்தும் நோக்கில் பேசுவதையே ஆளுநர் ரவி வழக்கமாக கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.
ஆளுநருக்கு உரிய எந்தவொரு வேலையும் பார்க்காமல், கிடைக்கும் மேடைகளில் அரசியல்வாதி போல ஆர்.என்.ரவி பேசுகிறார் எனவும் குற்றஞ்சாடியுள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை விடுத்துள்ள பதிவு வருமாறு;

கடும் கண்டனம்: திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் 'பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பப்பட்டார்கள்' என்று தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் சிறப்பு செய்திட்ட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் இழிவு படுத்தும் விதமாக ஆளுநர் பேசியிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராபர்ட் கால்டுவெல்: அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ்நாட்டில் வருவதற்கு முன்பு இந்தியாவின் தொன்மையான, சிறப்பான மொழி சமஸ்கிருதம் என்றும், தமிழ்மொழி உட்பட அனைத்து மொழிகளும் அந்த மொழியிலிருந்துதான் தோன்றியது என்ற மாயை இந்தியாவில் நிலவியது. மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் பல மொழிகளை ஆராய்ந்து, சமஸ்கிருதத்திற்கு முன்பிருந்த மொழி தமிழ்மொழி என்றும், அதன் தொன்மையையும், சிறப்பையும் ஆய்வின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியவர்.
ஆர்.எஸ்.எஸ் : சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ்மொழியால் இயங்க முடியும் என்றும் சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் பிற நாட்டினருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று முதன் முதலில் அச்சில் ஏற்றியவர். தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் பண்டைய தமிழர்களின் நாகரீகம் குறித்தும் வெளியிட்டவர். சமஸ்கிருதத்தின் முகமுடியை கிழித்து, தமிழ்மொழியின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்களை இழித்து பேசுவது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களில் மூழ்கியவர்களால் மட்டும்தான் முடியும்.
கிடைக்கும் மேடைகளில்: தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பிய மசோதாக்கள், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகள் எதையும் நிறைவேற்றாமல், ஆளுநருக்கு உரிய எந்தவொரு வேலையும் பார்க்காமல், கிடைக்கும் மேடைகளில் அரசியல்வாதி போல பேசுகிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் எவர்கள் நல்லது செய்கிறார்களோ அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்களை இழிவு படுத்தும் நோக்கத்தோடு பேசும் தமிழ்நாட்டின் ஆளுநருக்கு மீண்டும் ஒருமுறை எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.












Click it and Unblock the Notifications