ஓபிஎஸ் கூடாரமே காலி.. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு திமுகவுக்கு தாவல்!
சென்னை: ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் இன்று திமுகவில் இணைந்து உள்ளனர். ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி என்ற ராஜகோபால் மற்றும் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓபிஎஸ் அணி மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான அணிக்கு எதிராக அதிமுக வலிமையான கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது. பாஜக, பாமக, அமமுக என என்டிஏ கூட்டணியை அதிமுக - பாஜக இணைந்து உருவாக்கி வருகிறது. அதேநேரம் ஓபிஎஸ் எதிர்காலம் என்னவாகும் என்பதில் கேள்விக்குறியே நிலவுகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். அதன் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் செயல்பட்டார். கடந்த நவம்பர் மாத இறுதியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவானது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகமாக மாறியது.
பரபரப்பான அரசியல் சூழலில் வைத்திலிங்கம் அண்மையில் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரும் திமுகவில் இணைந்தனர்.
முன்னதாக, ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் தவெகவில் இணைந்துவிட்டனர். ஓபிஎஸ் அணியில் இருந்த ராஜ்யசபா எம்.பி தர்மர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஓபிஎஸ் திக்குத் தெரியாமல் தடுமாறி வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் செய்வது அறியாமல் பரிதவித்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அதற்குள் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்று தங்கள் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர், ஒன்றிய, நகர செயலாளர்கள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஓபிஎஸ் அணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பூர் சீனி (எ) ராஜகோபால் தலைமையில் அஇஅதிமுக ஓபிஎஸ் அணி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் இன்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.\
இவர்களுடன், பல்வேறு கிளை மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம், விளாத்திகுளம் தொகுதியில் ஓபிஎஸ் அணியின் அமைப்புகள் முற்றிலும் வலுவிழந்து உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மார்கண்டேயன் எம்.எல்.ஏ., "மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் திமுக அரசின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இந்த இணைவு நடைபெறுகிறது. விளாத்திகுளம் தொகுதியில் திமுக மேலும் வலுப்பெறும்" எனத் தெரிவித்தார். மேலும், இணைந்த அனைவரையும் கட்சியின் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.
திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கருப்பூர் சீனி என்கிற ராஜகோபால் பேசுகையில், "மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் திமுக தலைமையின் செயல்பாடுகள் எங்களை ஈர்த்தன. தொகுதி வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் திமுகவில் இணைந்தோம்" எனக் கூறியுள்ளார். இந்த நிகழ்வின் மூலம், விளாத்திகுளம் தொகுதியில் திமுகவின் அரசியல் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications