உலகையே உலுக்கிய கமேனி கொலை.. அமெரிக்கா இஸ்ரேலை கண்டித்து சென்னையில் ஷியா முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னை: அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப் படையினரால் ஈரானின் உச்சத் தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை ராயப்பேட்டையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு கடுமையான போர் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் அந்த நாட்டில் மட்டுமின்றி அருகிலுள்ள வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், கத்தார், பஹ்ரைன், குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பும் அடுத்தடுத்து பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டு தாக்குதலில் ஈரானின் அதி உயர் தலைவரான கமேனி கொல்லப்பட்டுள்ளார். தாங்கள் நடத்திய தாக்குதலில் கமேனி உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். கமேனி கொல்லப்பட்டதாக இஸ்ரேலும் கூறியிருந்தது. இந்தச் சூழலில் கமேனி உயிரிழந்ததை ஈரான் அரசின் ஊடக நிறுவனம் உறுதி செய்துள்ளது.
டெஹ்ரானில் சனிக்கிழமை அயத்துல்லா சையத் அலி கமேனி தனது அலுவல் பணிகளை வழக்கம் போல கவனித்துள்ளார். அப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு நடத்திய தாக்குதலில் அந்த கட்டிடம் சேதமடைந்தது. இதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி மற்றும் அவரது மகள், மருமகள், பேரக் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிரிழந்தனர்.
86 வயதான கமேனி, கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் ஈரானில் ஆட்சி பொறுப்பில் இருந்தவர். அதனால் அவரது மறைவை அடுத்து அந்நாட்டில் 7 நாட்கள் பொது விடுமுறை மற்றும் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கமேனியின் உயிர் தியாகத்துடன், அவரது பாதையில் செல்வோம், அவரது பணி மறக்கப்படாது. அதைவிட அதிக வீரியத்துடனும், ஆர்வத்துடனும் தொடரும் என ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் உச்சத் தலைவர் கமேனி, அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப் படையினரால் கொல்லப்பட்டுள்ள சம்பவம், உலகம் முழுவதும் ஷியா பிரிவு முஸ்லிம்களை இப்படுகொலை கொந்தளிக்க வைத்துள்ளது. கமேனி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை ராயப்பேட்டையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications