தமிழ்நாட்டில் SIR.. தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 12 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாஜக, தேமுதிக, நாதக, விசிக,ஆம் ஆத்மி என 12 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலை கணக்கில் கொள்ளாமல், புதியதாக பட்டியலை உருவாக்கும் நடவடிக்கைதான்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 21 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நாடு முழுவதும் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக பீகார் மாநிலத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, தேர்தல் ஆணையம் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. இந்நிலையில் நாடு முழுவதும் SIR மேற்கொள்ளப்படுவதால் அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பீகாரில் SIR நடவடிக்கையின்போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதகளில் ஆதார் அட்டையை ஆவணமாக தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை என்றும், ஆனால் மற்ற பகுதிகளில் ஆதாரை ஏற்றுக்கொண்டனர் என்றும் குற்றச்சாட்டுகள் ஆணையம் மீது எழுந்தது. அதேபோல புதிய வாக்காளர் பட்டியல் உருவாக்கியபோது அதில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருந்தனர். இது குறித்தும் எதிர்க்கட்சிகள் சந்தேககங்களை கிளப்பியிருந்தனர். ஆளும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் அதிகம் உள்ள தொகுதியில், அதிக அளவில் வாக்காளர்கள் விடுபட்டிருக்கின்றனர் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் SIR நடவடிக்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் என மொத்தம் 12 மாநிலங்களில் இந்த பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்ப்பதும், இருக்கும் பெயர்களை நீக்கும் நடைமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணிகள் நவ.4ம் தேதி தொடங்கி டிச.4ம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த பணிகள் முடிந்து டிச.9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் டிச.9 முதல் ஜன.8 வரை தெரிவிக்கலாம். ஆட்சேபனை தொடர்பான சரிபார்ப்புகள் டிச.9 முதல் ஜன.31 வரை மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் எல்லாம் முடிந்து பிப்.7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
முன்னதாக SIR குறித்து, "தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம்.
அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும். மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications