"6 முறை தோற்றவர் அக்கா” - உதயநிதியின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த தமிழிசை!
சென்னை: அண்ணாமலை இந்தச் சட்டமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பதற்கான விளக்கத்தைத் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் களத்தில் 'அட்டாக் பாண்டி' அவதாரம் எடுத்திருக்கிறார் உதயநிதி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தைக் காட்டி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது சர்ச்சையானது. எடப்பாடி பழனிசாமி அவரை தனிப்பட்ட ரீதியில் தரம் தாழ்ந்து விமர்சித்திருந்தார். அதற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டவர் உதயநிதிதானே என அதிமுகவினர் எதிர்வாதம் செய்தனர்.
அதே அளவுக்கு அவரது விமர்சனத்தைக் கண்டு பொங்கி எழுத்துள்ளார் மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன். இந்தத் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை வேலுவை ஆதரித்து பரப்புரை செய்ய வந்த உதயநிதி ஸ்டாலின், "தமிழிசை அக்கா 6 முறை தேர்தலில் நின்று தோற்றவர். ஆகவே அவருக்கு ஆளுநர் பதவி மாதிரி ரப்பர் ஸ்டாம்பு பதவி கொடுத்து அனுப்பி வைப்போம்" என்று பேசி இருந்தார்.

தமிழிசை செளந்தரராஜனுக்கு மயிலாப்பூர் தொகுதி என்பது உறுதியாவதற்கு முன்னதாகவே எடப்பாடி பழனிசாமி இத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தமிழிசை வாகனத்தில் வலம் வந்தார். சீட்டு ஒதுக்குவதற்கு முன்னதாகவே மயிலாப்பூரில் எப்படி இவர்? எனப் பலருக்கும் சந்தேகம் வந்தது.
ஆனால், அன்று தென் சென்னை தொகுதியின் பொறுப்பாளர் என்ற வகையில்தான் தான் எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றாகச் சேர்ந்து பிரச்சாரத்திற்குச் சென்றதாகவும் அப்போது தானே மயிலாப்பூர் வேட்பாளராக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்களான இருவர் போட்டியிடுகின்றனர். ஒன்று, தமிழிசை செளந்தரராஜன். மற்றொருவர், எல். முருகன். தற்போது தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனும் போட்டியிடுகிறார்.
ஆனால், முன்னாள் தலைவரான அண்ணாமலை மட்டும் களத்தில் இல்லை. அதற்குள் ஆயிரம் விஷயங்கள் விவாதிக்கப்படுக்கின்றன. இதற்கு ஒரே வரியில் பதிலளித்துள்ளார் தமிழிசை.
"அண்ணாமலையே தனக்கு சீட்டு வேண்டாம் எனச் சொன்னதால் அவர் நிற்கவில்லை. அதற்கு மேல் அதற்கு எந்த ரகசியமும் இல்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு நான் தேசிய செயலாளராக இருந்தேன். அப்போது நடைபெற்ற தேர்தலில் எனக்குச் சீட் வழங்கப்படவில்லை. எல்லோரும் கேட்டார்கள். நான் எங்களுக்குத் தொகுதி கிடைக்கவில்லை. ஆகவே போட்டியிடவில்லை என்று சொன்னேன். அப்படித்தான் அண்ணாமலை தனது சொந்த முடிவு காரணமாக நிற்கவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "பாஜக அரசு 'எஸ்.ஐ.ஆர்' கொண்டுவந்தபோது அதைத் திமுக எதிர்த்தது. அதனால் என்ன நன்மை நடந்திருக்கிறது? என் மயிலாப்பூர் தொகுதியில் மட்டும் 85 ஆயிரம் வாக்காளர்கள் போலி என நீக்கப்பட்டுள்ளனர். அப்படி எனில் இத்தனை ஆண்டுகளாக இந்த செத்துப் போன வாக்காளர்களை வைத்துத்தான் திமுக வெற்றி பெற்றது. எங்கள் அப்பா 1967 இல் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
அப்போது திமுக வெற்றி பெற்றது. அந்தக் காலத்தில் வாக்காளர்களின் விரலில் தடவப்படும் மையானது ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்படுமாம். அப்படி வைக்கின்ற மையை அழித்துவிட்டு திமுகவினர் மறுபடி மறுபடி வாக்களித்தார்களாம். அதனால் திமுக வென்றது. அதைப் பற்றி என் அப்பா, "வாய்மையால் திமுக வெல்லவில்லை; பொய் 'மை'யால் வெற்றி பெற்றது" என்று சொன்னாராம்.
அதற்கு அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், "அவர்கள் புதியதாக இப்போதுதான் வென்றுள்ளார்கள். அப்படி விமர்சிக்கக் கூடாது" என்று சொன்னாராம். அந்தக் காலத்திலேயே போலி மையை வைத்து திமுக வென்றது" என்று பேசியுள்ள தமிழிசை, தன்னைப் பற்றி உதயநிதி 6 முறை தோல்வியைச் சந்தித்தவர் என விமர்சனத்திற்குத் தக்க பதிலடி தந்துள்ளார்.
"உதயநிதி தனியாகக் கட்சி ஆரம்பித்து வந்து தேர்தலில் போட்டி போட்டிருந்தால் 8 முறை தோற்று இருப்பார். அவரைப்போல் அப்பா கையைப் பிடித்துக்கொண்டு நான் அரசியலுக்குள் வரவில்லை. என் தந்தையை எதிர்த்து பாஜகவில் செயல்பட்டேன். அந்த உழைப்புக்கான அங்கீகாரமாக ஆளுநர் பதவி கிடைத்தது. அரசியலில் என் வெற்றி ஒவ்வொன்று சொந்த உழைப்பால் பெற்றவை.
திமுகவில் ஸ்டாலின் முதல்வர். அதனால் அவரது மகனான உதயநிதி துணை முதல்வரானர். அவர் நேரடியாகச் சாதாரண தொண்டனாக இருந்து இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியுமா? திமுகவில் இவருக்குக் கிடைத்த வாய்ப்பு வேறு சாதாரண தொண்டனுக்குக் கிடைக்குமா? அல்லது கிடைத்திருக்கிறதா? ஏன் கிடைக்கவில்லை? அந்தக் கட்சியில் சமூக நீதி எங்கே இருக்கிறது?
ஆகவே, அவர் என்னை விமர்சிக்கக் கூடாது. என் அரசியல் அனுபவம் என ஒன்று உள்ளது. அதற்காக அவர் மதிப்பு தரவேண்டும். அதைவிட்டு விளையாட்டுத் தனமாகப் பேசக்கூடாது" என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாகத் தான் ஒரு சென்னைவாசிதான் எனத் தெரிவித்துள்ள தமிழிசை, "வாரத்தில் மூன்று நாட்கள் மயிலாப்பூரில்தான் இருக்கிறேன். நான் வணங்கும் இரண்டு சாய்பாபா கோயிலுக்கும் கடந்த 40 ஆண்டுகளாகத் தவறாமல் வந்து போகிறேன்" என்கிறார்.
- கடற்கரய்












Click it and Unblock the Notifications