வேலுமணி.. வளர்மதி.. வெற்றிவேல்.. 3 பேரை ஒரே புள்ளியில் இணைத்த விஜிலன்ஸ் போலீஸ்.. மாநகராட்சிதான் குறி
சென்னை: தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நாளுக்கு நாள் தீவிரமான ரெய்டுகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரில் தொடங்கிய ரெய்டு தற்போது முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளர் வரை வந்து நிற்கிறது. அதிலும் நடந்து முடிந்த ரெய்டுகளுக்கும் இனி நடக்க போகும் ரெய்டுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன... என்ன தொடர்பு என்று பார்க்கலாம்.
கடந்த வாரம் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அவரின் வீடு, அலுவலகம், நண்பர்கள் வீடு என்று மொத்தம் 60 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசியலை, அதிமுகவை, முன்னாள் அமைச்சர்களை இந்த ரெய்டு உலுக்கியது. இந்த ரெய்டின் தொடர்ச்சியாக வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
13 லட்சம் ரூபாய் பணமும் இதில் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. அதோடு முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ்கள், சில முக்கியமான ஹார்ட் டிஸ்க்குகள் இதில் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில்தான் தற்போது வளர்மதியின் உதவியாளர் வெற்றிவேல் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.

ரெய்டு
சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரராக இருக்கும் வெற்றிவேல் வீட்டிலும் அவரின் தந்தை துலுக்கானம் வீட்டிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு, தற்போது வளர்மதியின் உதவியாளர் வெற்றிவேல் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு எல்லாம் ஒரே புள்ளியில்தான் இணைகின்றன. அந்த புள்ளிதான் "சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்தம்". வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம், திமுகவின் அமைச்சர் செயலாளர் ஆர். எஸ் பாரதி மூலம் இதில் வழக்கு தொடுக்கப்பட்டது. சென்னை, கோவையில் மாநகராட்சி கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதில் முறைகேடு செய்ததாக புகார் வைக்கப்பட்டது.

வழக்கு
இது தொடர்பான வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. 40க்கும் அதிகமான டெண்டர்களை விட்டதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் வைக்கப்பட்டது. அதோடு 811 கோடி ரூபாய் வரை இதில் முறைகேடு செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் திமுகவின் ஆர்.எஸ் பாரதி தரப்பு புகார் வைத்த நிலையில்தான் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

முக்கியம்
இந்த ரெய்டின் போதே சென்னையில் இருக்கும் மாநகராட்சி ஒப்பந்ததாரர் வெற்றிவேல் மீதும் கவனம் திரும்பியது. எஸ்.பி வேலுமணி மூலமாக வெற்றிவேல் பல்வேறு டெண்டர்களை பெற்றதாக அப்போதே பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டன. இருவருக்கும் நிறைய தொடர்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிப்பட்டன. ஆனால் இது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் பொதுவில் வெளிவராத நிலையில்தான் தற்போது வெற்றிவேல் வீட்டில் அதிரடி ரெய்டுகளை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.

ரெய்டு திருப்பம்
இந்த ரெய்டு காரணமாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கில் திருப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கிற்குள் மாஜி அமைச்சர் வளர்மதியும் கொண்டு வரப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மாநகராட்சி ஒப்பந்தம் என்ற ஒற்றை நூலை பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அதில் இருக்கும் மாஜி அமைச்சர்களை எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்து வருகிறது. மாநகராட்சி ஒப்பந்தங்கள் என்ற ஒற்றை புள்ளி மூலமாக பலரை விசாரிக்கும் முடிவில் லஞ்ச ஒழிப்புத்துறை இறங்கி உள்ளது.

வெற்றிவேல்
தற்போது ரெய்டில் சிக்கி இருக்கும் வெற்றிவேல் எஸ்.பி வேலுமணிக்கும் நெருக்கமானவர் அதேபோல் வளர்மதிக்கு உதவியாளராக இருந்தவர். அதிமுகவில் இன்னும் சில மாஜி அமைச்சர்களுக்கும் இவர் நெருக்கம். இதனால் இவர் மூலம் இன்னும் பல தலைகள் சிக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதே சென்னையில் நடந்த டெண்டர் முறைகேடுகள் குறித்து குற்றஞ்சாட்டி வந்தது. அப்போதே ஆர்.எஸ் பாரதி இந்த வழக்கை தொடுத்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால் மாநகராட்சி டெண்டர் முறைகேடு விசாரணைகளில் அரசு அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது.

ஏதோ இருக்கிறது
தொடர்ந்து மாநகராட்சி டெண்டர் தொடர்பான விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்துவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கு பின் வலுவான முறைகேடுகள், ஆதாரங்கள் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர் ரெய்டுகளை நடத்தாது. ஏதோ ஒரு பெரிய விஷயம் உள்ளே புதைந்து இருப்பதால்தான் விஜிலன்ஸ் அடுத்தடுத்த ரெய்டுகளை நடத்தி வருகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதோடு தற்போது வளர்மதியின் உதவியாளர் வரை ரெய்டு நீண்டு இருப்பதால் அடுத்து வளர்மதி வீட்டிலும் ரெய்டு நடத்தப்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன. அவருக்கு சொந்தமான இடங்களும் குறி வைக்கப்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
Recommended Video

மாட்டுவார்கள்
இந்த ரெய்டு காரணமாக மாஜி அமைச்சர்கள் மட்டுமின்றி பல கட்டுமான நிறுவனங்களும் சிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டிலேயே 10க்கும் அதிகமான நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது வெற்றிவேல் ரெய்டை தொடர்ந்து மேலும் சில நிறுவனங்கள் விசாரணை வளையத்திற்குள் வரலாம் என்றும் கூறப்படுகிறது. சரி அடுத்தடுத்து ரெய்டு நடக்கிறதே கைது எதுவும் இல்லையே என்று பலர் கேட்டு வருகிறார்கள். இப்போதைக்கு இதில் கைது நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என்றே தகவல்கள் வருகின்றன.

கைது ஏன்?
லஞ்ச ஒழிப்புத்துறை வலுவான ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்போதைக்கு கைதுகள் அரங்கேறாது. நேரடியாக வழக்கு விசாரணையில் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன்பே கைதுகள் நடக்க வாய்ப்பு இல்லை. வழக்கு விசாரணைகள் மூலம் மட்டுமே முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. வலுவான ஆதாரங்களை திரட்டவே இந்த தொடர் ரெய்டு நடத்தப்படுகிறது.. இனியும் நடக்கும் என்று தகவல்கள் வருகின்றன.











Click it and Unblock the Notifications