வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் சேமிப்பை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம்! முதலமைச்சர் பெருமிதம்!
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் சேமிப்பை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
முகவர் மீதான புகார், நில அபகரிப்புப் புகார் தொடர்பான 53 இனங்களில் தீர்வு காணப்பட்டிருக்கிறது. அயல்நாட்டில் வசிக்கின்ற நம்முடைய தமிழர்கள், இங்கு இருக்கின்ற அவர்களுடைய குடும்பத்தினர் எதிர்கொள்ளுகின்ற நிலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை களைய, டி.ஜி.பி அலுவலகத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது.

அயல்நாடுகளுக்குப் செல்கின்ற தமிழர்களுக்கு, அந்த நாடுகளின் சட்டம், பண்பாடு மற்றும் மொழி தொடர்பான குறைந்தபட்சப் புரிதலை உருவாக்க, சென்னையில், முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இப்போது, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் இந்த மையங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வெளிநாடு வாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய சேமிப்பை தமிழ்நாட்டில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி இவர்கள் முதலீடுகள் அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏதுவான சூழலையும் உருவாக்கி இருக்கிறோம்.
தாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாகவும் உங்களை பார்த்து நான் அகம் மகிழ்கிறேன். நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்!
தமிழ் அன்னையின் குழந்தைகள்! அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்... எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள்! அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்! தமிழோடு இணைந்திருங்கள்! நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நமது திராவிட மாடல் அரசுக்கும் துணையாக இருந்திடுங்கள்! என்று கேட்டு, அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளைக் தெரிவித்து விடைபெறுகிறேன்.












Click it and Unblock the Notifications