சாதி வாரி கணக்கெடுப்பு.. சட்ட சபையில் காரசார விவாதம்.. வெளிநடப்புக்கு பின் ஜிகே மணி பரபர பேட்டி
சென்னை: 10 .5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் வெளிநடப்பு செய்த பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி, உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தான் அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது மாநில அரசு. ஆனால் இப்போது மாநில அரசாங்கம் எதுவும் பண்ண முடியாது.. மத்திய அரசை கேளுங்க என்கிறார்கள்" என்று பேட்டியளித்தார்.
10 .5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் காரசார விவாதம் இன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி, செய்தியாளர்களிடம் கூறியாதவது:-

சாதி வாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு இரண்டும் தனித்தனி பிரச்சினை. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இப்போது என்ன சொல்கிறார்கள்.. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திதான் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி கொடுக்க வேண்டும் என்பது தனி பிரச்சினை.
உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தான் அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு. மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கீடு இதை எல்லாம் வழங்கியது மாநில அரசுதான். இது தொடர்பாகத்தான் கேட்கிறோம். ஆனால், அமைச்சர்கள் திசை திருப்புகிறார்கள். அரசியல் பேசுறாங்க.. கூட்டணி பேசுறாங்க.. இது சமூக நீதி பிரச்சினை..
மாநில அரசாங்கம் பண்ண முடியாது.. மத்திய அரசை கேளுங்க என்கிறார்கள். இது என்ன நியாயம். அமைச்சர்கள் புரிந்து பேசுகிறார்களா இல்லையா என்று தெரிய வில்லை. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தான் இதுவரை வழங்கப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கும் மேல் போகக்கூடாது என்பது சட்டம். ஆனால், 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் கூடாது என்று சொல்கிறது.
இந்த பிரச்சினையில் ஜெயலலிதா, மத்திய அரசிடம் பேசி அட்டவணையில் சேர்த்தார்கள். அதுதான் இன்று வரை தக்க வைக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்கிறது. 69 சதவிகிதம் எந்த அடிப்படையில் வழங்கினீர்கள் என்று.. அப்போ சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இதை தக்க வைக்க வேண்டுமா இல்லையா? இது சமூக நீதி பிரச்சினைதான் நாங்க பேசுகிறொம். இவ்வாறு ஜிகே மணி பேசினார்.
முன்னதாக இன்று காலை தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இன்றைய தினம் பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசுகையில், 12, ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வடமாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. எனவே 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அமலானால் அந்த பிரச்சினை சரி செய்யப்படும்.
இந்த இடஒதுக்கீட்டுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது எப்போது எடுக்கப்படும் என்பதை அமைச்சர்களின் வாயிலாக அறிய விரும்புகிறேன் என்றார். அப்போது சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தரவுகள் இல்லை என்பதால் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் நிலுவையில் வைத்துள்ளது.
10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த தரவுகளை சேகரிக்க பாரதிதாசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுக்கு இந்த அரசு எந்த வகையிலும் தடையாக இருக்காது என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சிவசங்கர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காகவே 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பாமக வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தால்தான் தமிழகத்தில் நடத்த முடியும். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உங்கள் கூட்டணி கட்சியினருடன் பேசுங்கள். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும். இதற்கு பாமக உறுப்பினர் கோ.க. மணி (ஜி.கே.மணி) ஆதரவு தர வேண்டும் என முதல்வர் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications