சென்னை சேலம் சாலை: கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ மீது போலீசார் தாக்குதல்..மனித உரிமை மீறல் என அபராதம்
சென்னை : பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடியதற்காக தாக்கி, சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2018ல் மத்திய அரசு சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை அறிவித்தபோதே விளைநிலங்களும் கிராமங்களும் பாதிக்கப்படுமென விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது வேறு பெயரில் மீண்டும் 8 வழிச்சாலைக்கான பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

எட்டுவழிச் சாலை போராட்டம்
இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, போராட்டத்திற்குப் பின், சக கட்சியினருடன் ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

சட்டவிரோதமாக சிறை
அங்கு வந்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் முத்துகுமாரசாமி, ராஜசேகர் ஆகியோர், தன்னை கடுமையாக தாக்கி, ஆபாசமாக திட்டி, புதுபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சட்டவிரோதமாக சிறைவைத்ததாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

மனித உரிமை ஆணையம் அதிருப்தி
போலீசாரின் இந்த செயல் மனித உரிமையை மீறிய செயல் என அதில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்த டில்லிபாபுவை போலீசார் நடத்திய விதம் குறித்து அதிருப்தி தெரிவித்ததார்.

ஒரு லட்சம் இழப்பீடு
மேலும் ஆவண ஆதாரங்களில் இருந்து மனித உரிமை மீறல் நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த தொகையில் டி.எஸ்.பி.யிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயையும், இரு உதவி ஆய்வாளர்களிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயையும் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications