என்னை தாண்டி யாரும் போக முடியாது.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இசட் பாதுகாப்பு கொடுக்கும் நாய்!
சென்னை: சாலைகளில் செல்பவர்களை விரட்டி சென்று குரைக்கும் தெருநாய்களுக்கு மத்தியில், சென்னை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தெருநாய் ஒன்று உதவியாக இருந்து வரும் நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. போலீசாருக்கு ஜிகிரி தோஸ்து போன்று உதவி வருகிறதாம் அந்த டைகர். போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற கொள்ளையனை பிடிக்கவும் அந்த டைகர் உதவி செய்திருக்கிறது.
செல்லப்பிராணிகளான நாய்கள் மக்களுக்கு பிடித்தமான உயிரினமாக இருந்து வருகிறது. பெரும்பாலானோர் வீடுகளில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை ஆசையுடன் வீட்டில் வளர்த்து வருவார்கள். அந்த நாய்களும் தன் நன்றி விசுவாசத்தினை அந்த குடும்பத்தினருக்கு காட்டும் வகையில் ஏராளமான வீடியோக்களை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.

இணையத்தில் பரவிய வீடியோ
ஆனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசாருக்கு தெருநாய் ஒன்று ஜிகிரி தோஸ்து போல உதவி செய்து வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.. ஆம் இது உண்மை தான்.. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் திருடன் ஒருவனை போலீசார் துரத்தி சென்று பிடித்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற திருடனை கவ்வி பிடிக்கிறது.
போலீஸ் நிலையம் அழைத்து வரும் வரை அந்த திருடனின் கால் சட்டையை கவ்வி பிடித்தப்படியே வரும் வீடியோ பதிவாகி பலரையும் வியக்க வைத்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நாயின் செயலை கண்டு வியந்து போய் வருகிறார்கள். இது பற்றி போலீசார் கூறுகையில் இது தெருநாய் என்றும், நாங்கள் அவ்வப்போது இந்த நாய்க்கு உணவளிப்போம்.. அதில் இருந்து எங்கு சென்றாலும் எங்களிடம் வந்துவிடும் என்று தெரிவித்தனர்.
உன்னிப்பாக கவனித்த நாய்
இது பற்றி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு ஒரு நாய்க்குட்டி ஒன்று அடைக்கலம் தேடி வந்தது. அப்போது இந்த நாய்க்கு நாங்கள் உணவளித்தோம். இதனால் இந்த நாய் பகலில் எங்கு சென்றாலும், இரவு நேரம் வந்துவிட்டால் இங்கு வந்துவிடும். நாங்கள் இரவு ரோந்து பணிக்கு சென்றாலும் கூடவே இந்த நாய் வந்துவிடும்.
இப்படி தொடர்ந்து எங்களிடமே வந்து கொண்டிருந்ததால் நாங்கள் இந்த நாய்க்கு டைகர் என பெயர் வைத்தோம். பாதுகாப்பு பணியின் போது போலீசார் என்ன செய்கிறார்கள்? யாரை பிடித்து விசாரிக்கிறார்கள்? சந்தேகத்திற்கு இடமாக பிளாட்பார்ம்களில் சுற்றித் திரியும் நபர்களை போலீசார் எப்படி பிடிக்கின்றனர் என்பதை உன்னிப்பாக கவனித்து வந்தது.
கொள்ளையனை கவ்வி பிடித்தது
இப்படியே எங்களுடனேயே இரவு முழுக்க அலைந்துவிட்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்துவிடும். இதேபோன்று இரவு நேரங்களில் யாராவது சந்தேகப்படும் வகையில் வந்தால் அவர்களையும் குரைத்து காட்டிக் கொடுத்துவிடும். அப்படித்தான் சம்பவத்தன்று ஒருநாள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டைகர் செய்த சம்பவம் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதாவது கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவனை நாங்கள் விரட்டி சென்று பிடித்தோம். அப்போது எங்களிடம் இருந்து கொள்ளையன் தப்ப முயன்றான். இதை கவனித்த டைகர் டக்கென அவனது காலை ஓடிச்சென்று கவ்வியது. இதில் வலி தாங்க முடியாமல் கொள்ளையன் அங்கேயே நின்றான். இதையடுத்து நாங்கள் அவனை கைது செய்து அழைத்து வந்தோம்.
அப்போதும் அந்த கொள்ளையனின் கால்சட்டையை டைகர் கவ்வியபடியே ஸ்டேஷன் வரையிலும் வந்தது. இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது" என்று தெரிவித்தனர். ஏராளமான தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை இரவு நேரங்களில் தொந்தரவு செய்தாலும், இந்த டைகர் போலீசாருக்கு உதவியாக செயல்பட்டு வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications