தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதா?.. கடுப்பான சு.வெங்கடேசன் எம்.பி.. அனுப்பிய பரபரப்பு கடிதம்!
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வுகளில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று சு. வெங்கடேசன் எம்.பி குற்றம் சாட்டி உள்ளார். உயர்கல்வி விகிதத்திலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா? என்று அவர் கூறியுள்ளார்.
அணுசக்தி துறை தலைவர் டாக்டர் தினேஷ் ஸ்ரீ வஸ்தவா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சு. வெங்கடேசன் எம்.பி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

தமிழ்நாட்டில் மையம் இல்லை
அணு எரி பொருள் வளாகம் (Nuclear Fuel Complex) 21.06.2021 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கை Stage I Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category - I, Post Code 21901- 21911. Advertisement No. NFC/02/2019 நியமன முதல்படித் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத நாடு முழுவதும் 6 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை.தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்கள் பெங்களூரில் போய் தேர்வெழுத வேண்டும். தனித்திரு என்கிறது அரசின் கோவிட் வழிகாட்டுதல்.

டெல்டா பிளஸ் எச்சரிக்கை
ஆனால் மாணவர்களை மாநிலம் விட்டு மாநிலம் அலையவிடுகிறது ஒன்றிய அரசு. கோவிட் பெருந் தொற்றின் இரண்டாவது அலை முடியவில்லை. ஜுன் 28 அன்று கூட கர்நாடகா முழுவதும் 2576 புதிய தொற்றுகள், 93 மரணங்கள். இவற்றில் பெங்களுர் 20% எனில் எப்படி மன அமைதியோடும், உரிய கவனத்தோடு தேர்வர்கள் அலைந்து தேர்வு எழுத முடியும். டெல்டா பிளஸ் எச்சரிக்கைகள் வேறு விடுக்கப்படுகின்றன.

இப்படித்தான் அணுகுமா?
உயர்கல்வி விகிதத்திலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா? தொடர்ந்து ஒன்றிய அரசின் தேர்வுகளில் எல்லாம் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதும் நாம் குரல் எழுப்புவதும் தொடர் கதையாக உள்ளது.

அணுகுமுறை மாறணும்
பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள அணுசக்தித்துறை தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும். தமிழகத்திலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுசக்தி துறை தலைவர் டாக்டர் தினேஷ் ஸ்ரீ வஸ்தவா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications