70 கோடி ரூபாயில் பளபளக்கும் பங்களா! ‘ஜோ’வுடன் மும்பைக்கு குடியேறிய சூர்யா?
சென்னை: மும்பை நகரத்தில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் சூர்யா ஒரு பங்களாவை வாங்கியுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்துடன் அங்கே குடியேறி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா திருமணம் நடைபெற்றது. கோலிவுட் வட்டாரத்தில் இந்த ஜோடியைப் பற்றிய காதல் கிசுகிசு மிகப் பெரிய அளவில் ஒரு காலத்தில் பேசப்பட்டது. 'பூவெல்லாம் கேட்டுப் பார்' படத்தின் மூலம்தான் முதன்முதலாக ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யா. அதன் பின்னால் அது 'காக்க காக்க' படத்தின் போது எல்லாம் காதல் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. இப்போது வரை சூர்யாவும் ஜோதிகாவும் திரையுலகில் ஒரு இணை பிரியாத நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வருகின்றன.

சில ஆண்டுகளாகவே சூர்யா மும்பைக்குக் குடிபெயர்ந்துவிட்டதாகத் தகவல் கசிந்துள்ளது. ஆனால், அது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. சமீபத்தில் நடந்த 'அகரம்' விழாவில் தனது குடும்பத்தினருடன் சூர்யா பங்கேற்றுப் பேசியிருந்தார். அதில், "எங்கள்'அகரம்' அமைப்பைச் செயல்பட ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றது. கடந்த 2006 ஆம் ஆண்டு விதை திட்டத்தை முதன்முதலாக அகரம் மூலமாகத் தொடங்கினோம். எங்கள் அப்பா காலத்தில் பள்ளிக்கூடத்திற்குப் போன முதல் தலைமுறை அவர் கதை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
ஆனால், 2006இல் கூட அதே நிலைதான் இருக்கிறது என்ற உண்மை நிலை தெரியவந்தபோது கல்விக்கு உதவ வேண்டும் என முடிவு செய்தோம். இன்றைக்குக் கூட மாதம் 3 ஆயிரம் ரூபாய் வருமானம் பெற முடியாத குடும்பங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் மனதில் வைத்துத்தான் இந்த உதவியைச் செய்யத் தொடங்கினோம்" என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் ஆங்கில பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜோதிகாவுடன் மும்பையில் உள்ள 70 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வீட்டிற்குக் குடிபெயர இருக்கிறார் சூர்யா என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

மும்பை நகரில் சுமார் ரூ.70 கோடி மதிப்பில் சூர்யா ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டில் தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் சூர்யா குடியேறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நியூஸ் 18படி, சூர்யாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.350 கோடி எனத் தெரியவந்துள்ளது.
இதில் சென்னை, மும்பையில் உள்ள இவரது வீடுகள், கார்கள் ஆகிய அனைத்தும் உள்ளடங்கி உள்ளது. இயக்குநர் வசந்தின் 'நேருக்கு நேர்' படத்தில் மூலம் சூர்யா தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். அப்பா சிவகுமார் மிகப்பெரிய நடிகராக ஒரு காலகட்டத்தில் வந்தவர். அதன்பின்னர் சின்னதிரையில் கூட தனது தனித்துவமான நடிப்பை பதியவைத்தவர். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் நடிப்பு வாழ்க்கை போதும் என்று அறிவித்தார்.
அப்பாவின் நடிப்பு சாயல் எதுவும் தன் மேல் விழாமல் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் சூர்யா. ஆரம்பக் காலங்களில் சிறிய வேடங்களில் நடித்து தனது திறமையை நிலைநாட்டினார். அதன்பின்னர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார். அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
ஒரு கட்டத்திற்குப் பிறகு படங்களைத் தயாரிப்பதற்காக 2டி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வெளியிட்டார். ஒரு பக்கம் இவரது ஜோதிகா விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். இன்னொரு பக்கம் நடிப்பின் மூலம் மீண்டு ரீ எண்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். எனவே சூர்யா குடும்பம் அதிக வருமானத்தை ஈட்டி வருகிறது. அதைக் கொண்டு அகரம் அறக்கட்டளை மூலம் பல கல்விச் சேவைகளைச் செய்து வருகிறார்.
இப்போது சூர்யா நடித்துவரும் 'கங்குவா' படத்திற்கு சுமார் ரூ.30 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இவருடைய சேகரிப்பில் ரூ.1.38 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ரூ.80 லட்சத்துக்கும் அதிகமான விலையில் ஆடி க்யூ7, ரூ.61 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ரூ.1.10 கோடி மதிப்புள்ள ஜாகுவார் உள்ளிட்ட பிற வாகனங்கள் இருக்கின்றன.
கௌதம்மேனன் இயக்கிய 'காக்க காக்க' மூலம்தான் சூர்யா திரை வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி பெற்றது. இதுவே அவரது முதல் வெற்றி. வெறுமனே பணம் சம்பாதிக்கும் கமர்ஷியல் நடிகராக இல்லாமல், கதையம்சம் கொண்ட வேடங்களில் கமல்ஹாசனுக்குப் பிறகு நடித்து திறமையை நிரூபிக்கும் ஒரு நடிகராகவும் சூர்யா அடையாளம் காணப்படுகிறார்.












Click it and Unblock the Notifications