இனி இங்கேயும் இலவசம்.. சாதாரண கட்டண பேருந்துகளில்.. தமிழக அரசு சர்ப்ரைஸ்.. மக்கள் மகிழ்ச்சி.. சபாஷ்
சென்னை: தமிழக போக்குவரத்து துறை சர்ப்ரைஸ் ஒன்றை தந்துள்ளது.. இந்த அறிவிப்பானது பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது.
குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

பஸ் பயணங்கள் : இதைத்தவிர, அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமான, விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதை மலைப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் பயனடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்தார்.. அந்தவகையில், மலைப்பகுதிகளிலும், கட்டணமில்லா பஸ்கள் விரிவுபடுத்தப்பட உள்ளது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது..
கட்டணமல்லா சேவை: இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது..
முதற்கட்டமாக உதகையில் இத்திட்டம் தொடங்கப்படும் என்றும் பிறகு படிப்படியாக மற்ற மலை கிராமங்களிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
சாதாரண கட்டண பேருந்து: அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்காக 350 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 475 மலை பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதிரடி அறிவிப்பு: இதில் சாதாரண நகர பேருந்துகளில் பஸ் வசதி உள்ள பகுதிகளில் 35 கிலோமீட்டர் வரையிலும், பஸ் வசதி இல்லாத பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வரை விடியல் பயணத்திட்டத்தை விரிவுபடுத்தி அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பை சமூகநலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ளார்.. இதனால் மலைப்பகுதிகளிலும் இனி பெண்களுக்கு இலவச பயணமானது, மிகுந்த பயன்களையும், வசதிகளையும் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications