Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுராந்தகத்தில் ஸ்வீட் எடு கொண்டாடு: மோடி தோளை தொட்டதுமே பூரித்த எடப்பாடி பழனிசாமி.. அத்தனை கசப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் நிரந்தரமான நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை... சூழ்நிலை, தேவை, அதிகாரக் கணக்குகள் மாறும்போது இன்று எதிரியாக இருப்பவர் நாளை நண்பர்களாக மாறலாம், இன்று கூட்டணியில் இருப்பவர் நாளை பிரிவை அறிவிக்கலாம். எப்போதுமே அரசியலில் உறவுகளை தீர்மானிப்பது தனிப்பட்ட உணர்வுகள் கிடையாது, அந்த நேரத்தின் அரசியல் அவசியம்தான்... அதுதான் இன்றைய தினம் மதுராந்தகத்தில் நடந்துள்ளது.

ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக ஆரம்பத்தில் பாஜகவுடன் இணக்கமாக இருந்தது. ஆனால், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக வந்ததும் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. அண்ணாமலை, அதிமுகவின் உதவி இல்லாமலே பாஜகவுக்காக தனியாக செயல்பட்டார்...

Maduranthagam NDA

சில சமயம், பழைய ஊழல்கள், திராவிட அரசியல் குறித்தெல்லாம் அண்ணாமலை பேசும்போது மறைமுகமாக அதிமுகவையும் விமர்சிக்கவே செய்தார்.. ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை குறித்து சொன்ன சில விமர்சனங்கள் அதிமுகவை கடுப்பாக்கின.. கோபமாக்கின..

எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை

அதுமட்டுமல்ல, தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான முக்கிய கட்சி பாஜகதான் என்பதை அழுத்தமாக வலியுறுத்தி சொல்லி கொண்டே இருந்தார்.. இதுவும் எடப்பாடிக்கு எரிச்சலை மூட்டியது.. போதாக்குறைக்கு அதிமுகவில் இருந்து சிலர் விலகி பாஜகவில் இணைந்ததற்கு அண்ணாமலை மறைமுகமாக காரணியாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது.. இதுவும் அதிமுகவில் சிக்கலை ஏற்படுத்தியது.

இதெல்லாம் ஒன்றுசேர்ந்து இறுதியில், "பாஜகவுடன் கூட்டணி முடியாது" என்று எடப்பாடி அதிகாரப்பூர்வமாக அறிவித்து,. தேசிய கூட்டணியில் இருந்தும் வெளியேறினார்..

இதுபோன்ற மோதல் போக்குதான் எடப்பாடி பழனிசாமிக்கும். டிடிவி தினகரனுக்கும் இடையில் வெடித்தது.. ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்து, பிறகு அரசியல் எதிரிகளாக மாறிப்போனார்கள் இருவரும்..

எடப்பாடி - அமமுக டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சரானபோது, தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தார்.. ஆரம்பத்தில் இருவரும் நன்றாக இணைந்து செயல்பட்டனர்.. ஆனால், எடப்பாடி தனது அதிகாரத்தை வலுப்படுத்த முயன்றார். இதனால் தினகரனுக்கும் அவர் இடையே சில நேரங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

ஓபிஎஸ்ஸுடன் இணைந்து, சசிகலா. தினகரனை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தனர்... இதுவே பெரிய மோதலுக்கு காரணமானது. பிறகு ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் எடப்பாடி தலைமையிலான அதிமுகக்கு சவால் ஏற்பட்டது. பிறகு தினகரன் 'அமமுக' என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இதற்கு பிறகு தினகரன் எடப்பாடியை "துரோகி" எனவும், எடப்பாடி தினகரனை "கட்சியை அழிக்க வந்தவர்" எனவும் மாறி மாறி விமர்சித்து கொண்டனர்.. விஜய் தலைமையை ஏற்க பாஜவை கழற்றிவிடவும் தயங்க மாட்டார்; அதிமுக தொண்டர்களை வைத்தே தவெக கொடியை பிடித்தவர் எடப்பாடி என்றும் சமீபத்தில்கூட டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியிருந்தார்..

தலைகீழ் மாற்றம்

ஆனால் மேற்கண்ட காட்சிகள் எல்லாமே இன்று தலைகீழாக மாறியிருக்கின்றன.. 4 நாட்களுக்கு முன்புகூட எடப்பாடி பழனிச்சாமி பெயரைக் கூட உச்சரிக்காமல் தினகரன் சென்று விட்டதாக விமர்சனம்கூட, இன்று காணாமல் போய்விட்டது..

இன்று மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருமே பங்கேற்றுள்ளனர்.. அங்கே மேடையில் கண்ட காட்சிகள் பலரையும் வியக்க செய்தது..

குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன் பொதுக்கூட்ட மேடையில் அவரை வரவேற்றார்... ஒரே மேடையில், மோடி முன்பு, தினகரன், எடப்பாடி பழனிசாமி இருவரும் கை குலுக்கி கொண்டனர்.. .

என்டிஏ கூட்டணியின் தமிழ்நாடு தலைவர், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரன் கூறியதும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் இபிஎஸ் என்று டிடிவி தினகரன் அழைத்ததும் மீண்டும் கைகளை தட்டி கூக்குரலிட்டார்கள்..

எடப்பாடியின் தோளை தொட்ட மோடி

அதேபோல எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனை சகோதரர் என்று அழைத்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மதிப்புக்குரிய சகோதரர் டிடிவி தினகரன் அவர்களே என்றும், பாஜகவின் முன்னாள் தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்களே என்றும் எடப்பாடி பழனிசாமி சத்தமாக மைக்கில் சொன்னார்.. உடனே பொதுக்கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர்.

அவ்வளவு ஏன், எத்தனையோ முறை தமிழகத்துக்கு பிரதமர் வந்து சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காத நிகழ்வுகளும் உண்டு.. ஆனால் இன்று ஒரே மேடையில் தன் பக்கத்தில் உட்கார வைத்து, தோளை தொட்டு மகிழ்ச்சியுடன் பேசியதையும் காண முடிந்தது.

ஆக,

நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை, லட்சியங்களே நிரந்தரம் என்பது மீண்டும் இன்று மதுராந்தகத்தில் நிரூபணமாகி உள்ளது..

காரணம், அரசியலில் உறவுகளை தீர்மானிப்பது நட்பு அல்லது பகை அல்ல, அந்த நேரத்திற்கான அதிகாரம், தேவை மற்றும் லாபக் கணக்கே.

அரசியல் உறவுகள் பெரும்பாலும் "தேவைகளின்" அடிப்படையிலேயே அமைகின்றன. அதனால்தான் அரசியல் தலைவர்கள் தங்கள் மோதல்களை பெரும்பாலும் தனிப்பட்ட பகையாகப் பார்ப்பதில்லை... அதை ஒரு சதுரங்க ஆட்டமாகவே கருதுகின்றனர். தனிப்பட்ட வெறுப்புகளை விட, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதே அந்த உறவுகளையும் தீர்மானிக்கிறது.

சூழல் மாறும்போது கசப்புகளை தூக்கியெறிந்துவிட்டு கைகுலுக்குவதைத் தான் "அரசியல் முதிர்ச்சி" என்றும் அவர்கள் அழைக்கிறார்கள்.

சுருக்கமாக சொன்னால், அரசியல் களத்தில் கசப்புகள் என்பது காலாவதியாகும் மருந்தை போன்றது, தேர்தல் தேதி குறித்தவுடன் அவை காணாமல் போய்விடும்..... அப்படித்தான் இன்று என்டிஏ கூட்டணி கசப்புகளும் மதுராந்தகத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளன... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+