திராவிட மாடல் ஆட்சியில் நீதி தாமதம் ஆகாது.. சதீஷ் வழக்கை சுட்டிக்காட்டி அமைச்சர் கயல்விழி பெருமிதம்
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் 25 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு திராவிட மாடல் ஆட்சியில் விரைந்து நீதி கிடைக்கும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார்.
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர்களது மூத்த மகள் சத்திய பிரியாவை, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ தயாளன் என்பவரின் மகன் சதீஷ் என்பவர் காதலித்து வந்தார்.

சதீஷின் காதலை சத்யபிரியா ஏற்றுக்கொள்ளாததால், கடந்த 2022 அம் ஆண்டு அக்.13 ஆம் தேதி கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியாவைவை, அந்த வழியாக வந்த ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்தார் சதீஷ். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி சதீஷை கைது செய்து, அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், சதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளி என தீர்ப்பளித்து தண்டனை விவரங்களை இன்று வெளியிட்டது நீதிமன்றம்.
மாணவியை கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனையும், மாணவியை சித்ரவதை செய்ததாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளில் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை இருப்பதால், அதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருவதால் குற்றச்செயல்கள் கடந்த ஆட்சியில் இருந்ததை விட குறைந்து வருகின்றன. அது மட்டுமல்லாது வழக்கு விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுத்தரும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளி சதீஸ்க்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
2022 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த குற்றச் சம்பவம் நடைபெற்ற உடனே விரைவாக குற்றவாளி சதீஸ் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டான். மேலும் முதலமைச்சரின் உத்தரவுப் படி துரிதமாக விசாரணையை மேற்கொண்ட தமிழ்நாட்டின் சிபிசிஐடி போலீசார் 70 சாட்சிகளை வழக்கில் இணைத்து குற்றவாளிக்கு எதிரான ஆதரங்களையும் உரிய வகையில் திரட்டி நீதிமன்றத்தின் முன் குற்றவாளியை நிறுத்தினர்.
சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் மற்றும் இதர விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நடைபெற்று 25 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. கொலைக்குற்ற வழக்கில் இவ்வளவு விரைவாக நீதி பெற்றுக்கொடுத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. இராவிட மாடல் அரசு.
ஒன்றிய அரசின் CBI விசாரணையில் இருக்கும் 2019 ஆம் ஆண்டு அறிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்னும் எந்த ஒரு முடிவும் தெரியாத சூழலில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றத்திற்கு இரண்டே ஆண்டில் தண்டனை கிடைக்கும் வண்ணம் செயல்பட்டுள்ளது திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் ஆட்சியில் நீதி வழுவாது. நீதி தாமதம் ஆகாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications