அதென்னப்பா அவருக்கு மட்டும் சால்வை! ஏன் எங்களுக்கெல்லாம் இல்லையா! அமைச்சர் முன்னிலையில் பஞ்சாயத்து!
சென்னை: அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையிலேயே சால்வை அணிவிப்பது தொடர்பான ஒரு பஞ்சாயத்து தாம்பரத்தில் நடைபெற்றுள்ளது.
அமைச்சருக்கும், எம்.எல்.ஏ.வுக்கு மட்டும் சால்வை போடுகிறீர்களே, மேயர், துணை மேயருக்கு எல்லாம் சால்வை போட மாட்டீர்களா என திமுக பிரமுகர் சுரேஷ் என்பவரிடம் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் வினவினார்.
அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் ஆய்வு
தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று ஆய்வு செய்தார். அப்போது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தாம்பரம் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது நேராக அமைச்சரை நோக்கி வந்த ஒரு திமுக பிரமுகர் கையில் வைத்திருந்த சால்வையை மா.சு.வுக்கு அணிவித்துவிட்டு மற்றொரு சால்வையை தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவுக்கு அணிவித்தார்.

துணை மேயர்
இதைப் பார்த்த தாம்பரம் துணை மேயர் காமராஜ், சுரேஷ், சுரேஷ் என அந்தக் கூட்டத்திலும் அந்த பிரமுகரை உரிமையாக அழைத்து, ''அதென்னப்பா அவருக்கு மட்டும் சால்வை, இன்னொரு எம்.எல்.ஏ. இருக்காரு, மேயர் இருக்காங்க, நான் இருக்கிறேன், எங்களுக்கெல்லாம் கிடையாதா'' என சிரித்துக்கொண்டே வினவினார். இதற்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் சால்வை அணிவித்த திமுக பிரமுகர் சுரேஷ் அதை கவனிக்காதது போல் நடந்து சென்றார்.

உரிமையுடன் கேள்வி
''மாநகராட்சி அலுவலகம் பக்கம் நீ வந்து தானே ஆகனும், அப்ப வச்சுக்கிறேன் உன்னை'' என மீண்டும் தாம்பரம் துணை மேயர் உரிமையுடன் அந்த நபரிடம் கூறினார். இந்த உரையாடல் அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்றாலும் கூட அதை அவர் கவனிக்காததை போல் கேட்டும் கேட்காததை போல் விறுவிறுவென நடையைக் கட்டினார்.

கொரோனா வார்டு
திமுகவில் இது போன்ற உரையாடல்கள் உரிமையுடன் நடைபெறுவதை பல இடங்களிலும் காணலாம். இதனிடையே நெஞ்சக நோய் மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு மையத்தை ஆய்வை முடித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் மறைமலைநகர், செங்கல்பட்டு என வரிசையாக ஒரு விசிட் அடித்தார்.












Click it and Unblock the Notifications