தாம்பரம் டூ ராமநாதபுரம்.. ஒரு தலைக்காதலனுக்கு பெண் என்ஜினியர் கொடுத்த மறக்க முடியாத பரிசு
சென்னை: சென்னை தாம்பரம் பீர்க்கன்கரணை பெண் என்ஜினியர் ஒருவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய கம்ப்யூட்டர் நிறுவன அதிகாரியை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஒரு வருடத்துக்கு மேலாக பெண் என்ஜினியரை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், அந்த பெண் காதலை ஏற்க மறுத்ததால், அவர் தவறாக சித்தரித்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த 26 வயாகும் ஷாம்ஜாய் ஹரிஷ் என்பவர் சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார். இவர் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் தங்கி, பிரபலமான தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.. இவர் ஐடி நிறுவனத்தில் சிறப்பாக வேலை செய்ததால் அதிகாரியாக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது.

சாப்ட்வேர் நிறுவனத்தில் லீட் ஆக மாறிய ஷாம்ஜாய் ஹரிஷ் டீமில் 8 பேர் வேலை செய்து வந்துள்ளார்கள். அவர்களில் 24 வயதான பெண் என்ஜினியர் ஷாம்ஜாய் ஹரிஷிடம் வேலை நிமித்தம் காரணமாக நட்பாக பழகினாராம். அதன்பிறகு ஒரு வருடத்துக்கு மேலாக அந்த பெண் என்ஜினியரை அவர் ஒருதலையாக காதலித்து வந்தாராம்.
ஒரு கட்டத்தில் ஷாம்ஜாய் ஹரிஷ், தனது காதலை பெண் என்ஜினியரிடம் கூறினாராம். ஆனால் அவரது காதலை ஏற்க பெண் என்ஜினியர் மறுத்துவிட்டார். ஷாம்ஜாய் ஹரிஷ் பலமுறை தனது காதலை சொல்லியும் அவர் காதலிக்க மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ஷாம்ஜாய் ஹரிஷ், எப்படியாவது அந்த பெண்ணை காதலிக்க வைத்து, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினாராம். இதற்காக டெலிகிராம் மூலமாக வேறு ஒரு நபர் பேசுவது போல் பெண் என்ஜினியரிடம் நட்பாக பேசியுள்ளார். அதன்படி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். மாடலிங் செய்தால் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியிருக்கிறார். இருவரும் தொடர்ந்து டெலிகிராம் மூலமாக பேசி வந்திருக்கிறார்.
இதற்கிடையில் பெண் என்ஜினியருக்கு அவர், தவறான குறுஞ்செய்திகளை அனுப்பினார். மேலும் பெண் என்ஜினீயர் ஆடை இன்றி இருக்கும் புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் என்ஜினியர், நடந்த விவரங்கள் அனைத்தையும் தனது தம்பியிடம் கூறினார். அவர், வேறு ஒரு டெலிகிராம் ஐ.டி.மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, ஷாம்ஜாய் ஹரிஷ்தான் இதுபோல் பேசியதை கண்டுபிடித்தார்.
பின்னர் சாப்ட்வேர் அதிகாரியான ஷாம்ஜாய் ஹரிஷிடம், தொலைபேசி மூலமாக பேசியபோது, “என்னை காதலிக்க வேண்டும். இல்லை நான் சொல்வதை எல்லாம் நீ செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன்” என மிரட்டினாராம். அதற்கு பெண் என்ஜினியர், தான் காவல் நிலையத்தில் புகார் செய்யப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால் பயந்து போன ஷாம்ஜாய் ஹரிஷ், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டாராம்..
இதனிடையே பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் பெண் என்ஜினியர் நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ராமநாதபுரம் சென்ற போலீசார், ஷாம்ஜாய் ஹரிசை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.
போலீசாரிடம் அவர் கூறுகையல், " நான் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பெண் என்ஜினியரை உயிருக்கு உயிராக காலித்தேன். ஆனால் அந்த பெண் என்னுடைய காதலை ஏற்கவில்லை. இதனால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பார்த்தேன். அப்படியாவது அவரை திருமணம் செய்ய நினைத்தேன்" என்று கூறியுள்ளார். இதையடுத்து ஷாம்ஜாய் ஹரிஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications