அப்பாடா! மொத்த சென்னைக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த ரயில்வே.. கடற்கரை - செங்கல்பட்டு பயணிகளுக்கு நிம்மதி
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகள் மாற்றி அமைக்கபட்டு இருந்தன. இதனால் பயணிகள் மிகவும் சிரமமடைந்தனர். இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் நாளை முதல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பிற்பகலில் இருந்தே ரயில்கள் இயங்க தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் தாம்பரம் வழியாக எழும்பூர் வரை இயக்கப்படுகின்றன. இதேபோன்று சென்னை கடற்கரையில் இருந்தும், செங்கல்பட்டில் இருந்தும் தாம்பரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

இதனால் தாம்பரம் ரயில் நிலையம் என்பது முக்கிய முனையமாக உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அந்த வகையில் தான் தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. தாம்பரம் பணிமனையில் கடந்த மாதம் 23ஆம் தேதி பராமரிப்பு பணி தொடங்கியது.
இதன் காரணமாக, சென்னை தாம்பரம் வழியாக வரும் ரயில்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்தது. குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால் பயணிகள் மிகவும் சிரமமடைந்தனர்.
இதனால் பணிகள் எப்போது முடிவடைந்து ரயில் சேவைகள் சீராகும் என்று பயணிகள் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்றுடன் தாம்பரம் பணிமனையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடைகிறது. இதனால் நாளை முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் யார்டு பராமரிப்பு பணிகள் முதலில் கடந்த 14 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதற்கு தகுந்த மாதிரி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் பராமரிப்பு பணியை முழுவதுமாக முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டது.
இதன் காரணமாக கூடுதாக மேலும் 4 நாட்களுக்கு பராமரிப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் 59 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
இதேபோன்று, பயணிகளின் வசதிக்காக குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தாம்பரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், இன்றுடன் தாம்பரம் யார்டு பணிகள் நிறைவடைகின்றது. இதனால் நாளை முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கம் போல் இயங்கும் மின்சார ரயில் சேவைகள் இயங்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட பயணிகள் மொத்தமாக குவிந்ததால் தாம்பரம் அருகே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்ததால் மின்சார ரயில் சேவைகள் சீராக இயக்கப்படாமல், ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால் மக்கள் பெரும் சிக்கலை சந்தித்திருந்தனர். இதனால் எப்போது இந்த மின்சார ரயில் சேவைகள் சீராகும் என்று பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களுக்கு நற்செய்தி கொடுக்கும் வகையில் தான் தற்போது ரயில்வேயின் இந்த அறிவிப்பு உள்ளது.
ஆனால், சென்னை ரயில் பயணிகளுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்றே ரயில் போக்குவரத்து சீரானது. செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து வழக்கமான கால அட்டவணைப்படி இயங்க தொடங்கியுள்ளது. அதேபோல தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் சீராகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்ததால் தற்போதே ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கிட்டதட்ட ஒரு மாத காலமாக அல்லோலப்பட்ட பயணிகள் தற்போது நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications