"குழப்பம்!" வங்கி பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமில்லை.. சர்ச்சையை கிளப்பிய ஐபிபிஎஸ்
சென்னை: அரசு வங்கிகளில் பணிபுரிவோருக்குத் தமிழ் தெரிந்து இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக ஐபிபிஎஸ் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் எஸ்பிஐ தவிர இதர அரசு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் IBPS எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது.
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி என அனைத்து அரசு வங்கிகளுக்கும் ஐபிபிஎஸ் மூலமே காலியிடங்கள் நிரப்பப்படுகிறது..

வங்கி பணி
கல்லூரி படிப்பை முடிக்கும் பல ஆயிரம் மாணவர்கள் ஐபிபிஎஸ் தேர்வுகள் மூலம் வேலை பெற்றிட வங்கித் தேர்வுகளுக்கென தனியாகவும் படித்து வருகின்றனர். அதேநேரம் ஐபிபிஎஸ் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுவதால், தமிழ்நாட்டில் தமிழ் மொழி தெரியாத பலரும் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

வெளிமாநிலத்தவர்
தொடக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் 20 முதல் 30 சதவிகிதம் வரை மட்டுமே வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வந்தனர். அந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மெல்ல 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 2022-23 ஆம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டியலில் 50 சதவிகிதத்துக்கு அதிகமானோர், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களே இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அத்தியாவசிய தேவை
வங்கிகள் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. அரசின் அனைத்து மானியங்களும் இப்போது வங்கிகள் மூலமே மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிகளைத் தெரிந்தவர்களுக்குப் பணி தர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ஐபிபிஎஸ் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்
அதாவது தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்குத் தமிழ் கட்டாயமில்லை என்று ஐபிபிஎஸ் அறிவித்துள்ளது. வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணியிடங்களை நிரப்பும்போது, மாநிலத்தின் அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான ஐபிபிஎஸ் அறிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிபிஎஸ் வட்டாரங்கள்
அதேநேரம் இது குறித்து ஐபிபிஎஸ் வட்டாரங்கள் கூறுகையில், "மொழி தெரியாமல் பணியில் சேரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில மொழியைக் கற்றுக்கொள்ள 3 மாத அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் மாநில மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால் அவர்களைத் தகுதிநீக்கம் கூடச் செய்ய முடியும்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications