மாமா தமிழ்மகன் உசேன் பேசணும்.. ‘டவுசர் காலம்’.. நெருங்கும் துருவங்கள்? ஓபிஎஸ் அணி மாசெவால் பரபரப்பு!
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பை மீண்டும் வலியுறுத்தி வருகிறது ஓ.பன்னீர்செல்வம் அணி.
சென்னை : ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் அசோகன், மாமா தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்புக்கு முயற்சிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட அதிமுக பிளவைத் தொடர்ந்து, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்பும் இரு அணிகளாகச் செயல்பட்டு, தனித்தனியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது. தொடர்ந்து, சிவில் வழக்கை எதிர்நோக்கி வருகிறார் ஓபிஎஸ்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் குமரி கிழக்கு மாவட்ட மா.செ, ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைய தமிழ்மகன் உசேன் போன்ற தலைவர்கள் முயற்சியெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி தான் காரணம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரிய வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த எட்டாவது தோல்வி என்று திமுகவினர் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர். அதேநேரம் இந்தத் தொடர் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் ஓபிஎஸ் தரப்பினர்.

சுதாரிப்பாரா?
அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிளவால், அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர் என்றும், அதிமுக வாக்குகளே சிதறிப்போயுள்ளன என்றும் ஓபிஎஸ் தரப்பினர் வாதங்களை வைக்கின்றனர். கடந்த முறை ஈரோடு கிழக்கில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் யுவராஜா 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், தற்போது அதிமுக வேட்பாளர் தென்னரசு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை மணி என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பினர். எனவே ஈபிஎஸ் சுதாரித்துக்கொண்டு, ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்ற கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

ஓபிஎஸ் அணி மா.செ
இந்நிலையில், அதிமுக ஓபிஎஸ் அணியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "அதிமுக இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நான் வயதில் சிறியவனாக இருந்தாலும் குமரி மாவட்டத்தில் இருந்துஅதிமுக மந்திரிகளாக இருந்தவர்களை காட்டிலும் எம்.எல்.ஏக்களாக இருந்தவர்களை காட்டிலும் இயக்கத்தில் நான் சீனியர். 1977 ல் அண்ணன் நாஞ்சில் வின்சென்ட்க்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு கேட்டவன். என் பள்ளிகூட பருவத்தில் அதாவது கால் சட்டை பிராயத்தில் மாமா தமிழ்மகன் உசேன் அவர்களின் கையை பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவன். ஆகவே நான் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன்.

பொறுமையா இருங்க
அண்ணன் ஓபிஎஸ் அண்ணன் ஈபிஎஸ் இரண்டு பேர் பக்கமும் உள்ள ஐ.டி விங் அண்ணன்கள் தம்பிகள் சில நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் அநாகரீகமான பதிவுகளை போடுவதை தவிர்க்க வேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது. அண்ணன் ஓபிஎஸ் என்ன தவறு செய்தார்? கொலை செய்தாரா கொள்ளை அடித்தாரா? முன்னாள் அமைச்சர்கள் ஒருவரும் வாய் திறக்க மறுக்கிறீர்களே.. ஏன் எந்த விஷயமாக இருந்தாலும் பேசி தீர்க்லாமே.. முன்னாள் அமைச்சர்களே அதிமுகவின் குடும்ப பிரச்சனை தானே நீங்கள் முன் வந்து பேசுங்கள்..

மாமா தமிழ்மகன் உசேன்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கம் இப்படி சீரழிவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாமா தமிழ்மகன் உசேன் அண்ணன் தளவாய் சுந்தரம் ஆகியோர் இதற்கான முயற்சியில் இறங்கி எல்லோரும் ஒன்று சேர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் இயக்கம் மாபெரும் வெற்றியைச் சந்திக்கும், வீர நடை போடும் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார் ஓபிஎஸ் அணியின் மா.செ அசோகன். அவரது இந்தப் பதிவு குமரி மாவட்ட அதிமுக மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்மகன் உசேன், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்புக்கு உதவுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

எடுபடாது
எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக்கு வர தொடர் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், உச்ச நீதிமன்றமும் அவருக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது. அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அங்கீகாரம் பெற்றிருக்கிறார். தற்போது ஈபிஎஸ்ஸின் கையே ஓங்கி இருக்கும் இப்படியான சூழலில் தமிழ்மகன் உசேன், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் அசோகன் சொல்கிறார் என்று மாமா -மருமகன் செண்டிமெண்ட்டுக்கு எல்லாம் மயங்கமாட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications