ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் குறித்து விரைவில் மனம் திறப்பேன்! செல்வப்பெருந்தகை போட்ட குண்டு!
சென்னை: காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் தொடர்ந்து முன் வைத்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் மனம் திறந்து பேசுகிறேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பெங்களூரில் கார்கேவை சந்தித்தது திடீர் சந்திப்பு இல்ல, ரெகுலரா சந்திக்கிறதுதான். எங்களுடைய தலைவர் அவரு, தேசிய தலைவர். ஏற்கனவே நான் தேர்தலுக்கு முன்னாடியே சொன்னேன், தேர்தல் முடிந்தவுடன் நான் மாநில தலைவராக தொடர்வதற்கு வாய்ப்பில்லை.

ஆகையால வேற ஒருவர் அந்த பணியை மேற்கொள்வார் என ஏற்கனவே சொல்லி இருக்கேன். பத்திரிகையாளர்கிட்ட மட்டும்ல்ல, எங்க தலைமைக்கும் நான் சொல்லி இருக்கேன். அந்த அடிப்படையில் வாதமும் பேசப்பட்டிருக்கிறது."
நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிக்கிறேனு சொன்னதற்கு அவர் கொஞ்சம் பொறுமையா இருங்க, நான் கூப்பிடுறேன்னு சொல்லிருக்காரு.
நான் இந்த பதவிக்கு வந்து கிட்டதட்ட 6 அல்லது 7 மாதங்களாகியிருக்கும். அப்படியிருக்கும் போது நான் ஏன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்றால்
தேர்தலுக்கு முன்பே சில கசப்புணர்வுகள், நண்பர்கள் எல்லாம் ஒரு புரிதல் இல்லாமல் பேசுவது... இப்படி எல்லாம் இருந்தது. என்னுடைய உள்மனசு சொல்லிச்சு, இனிமே இந்த பதவியில் தொடர வேண்டாம்.
அப்ப இது மாதிரி ஒரு பதவியில் இருந்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசுவாங்க, அதனால் இனிமே நாம இந்த பதவில தொடர்வதற்கான வாய்ப்பில்லைன்னு என் மனசு சொல்லிச்சு.
நான் அத பத்திரிகையாளர் கிட்ட ஏப்ரல் மாசமே சொல்லிட்டேன், ஏப்ரல் முதல் வாரத்திலேயே நான் தேர்தலுக்கு பிறகு இந்த பதவியில், தலைவர் பதவியில் தொடர்வதற்கு வாய்ப்பில்லை, இன்னொருவர் இந்த பதவியை ஏற்பார்கள் அதை என் தலைமை கிட்ட நானும் சொல்லி இருக்கேன். தலைமை வந்து என்னுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து என்னை விடுவிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என்றார்.
அப்போது செய்தியாளர், "மாணிக்கம் தாகூரா இருக்கட்டும், இல்ல ஜோதிமணியாக இருக்கட்டும், இல்ல விஸ்வநாதனா இருக்கட்டும்... பலரும் உங்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவிச்சாங்க. உங்களுக்கு எதிரா செயல்பட்டதா ஒரு கருத்து பரவுது. அது உண்மைதானா? என்னதான் சார் நடந்திருக்கு?" என கேட்டிருந்தார்.
அதற்கு செல்வப்பெருந்தகை பதிலளிக்கையில், "நான் ஒரு நாளைக்கு விபரமா மனம் திறந்து உங்கிட்ட பேசுவேன். உங்ககிட்ட பேசாம யாரு கிட்ட பேச போறேன், உங்ககிட்டதான் பேசுவேன்." என்றார்.
செல்வப்பெருந்தகை மீது ஜோதிமணி எம்பி முன் வைத்த குற்றச்சாட்டு தொடர்பான பதிவில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகபெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை,வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள்,வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தேரதலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தாமல், தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க கமிட்டி அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே.
தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது தமிழ்நாடு பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி. அந்தக் கமிட்டி மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே விசாரிக்க முடியும்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொறுப்பாளர்கள் விசாரிக்க முடியாது.
காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழ்நாடு சட்டமன்ற தேரதல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
பல்வேறு மாநிலத் தேர்தல்களில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. சில நேரங்களில் இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால் விசாரணை செய்வதற்குப் பதிலாக தவறு செய்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.
தமிழ்நாடு வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகய் தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகபெரிய பின்னடைவாக அமையும்.
இந்த நாட்டை பாஜக நரேந்திர மோடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் எவ்வித சமரசமும் இல்லாமல் போராடி வருகிறார்.
ஆனால் கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை குலைத்து வருகிறது. நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று போராடி வெற்றிபெற வேண்டுமானால் கட்சிக்குள் தொண்டர்கள் மாவட்ட,வட்டார தலைவர்களின் குரலுக்கு மதிப்பு இருக்க வேண்டும். நேர்மையோடும்,வெளிப்படைத் தனமையோடும்.கட்சி செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் இருந்து துவங்கட்டும்."
இவ்வாறு ஜோதிமணி எம்.பி. தன் X பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பதிவில் செல்வப்பெருந்தகை மட்டுமல்லாமல் கிரிஷ் சோடங்கர் குறித்தும் ஜோதிமணி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications