தமிழக சட்டசபைத் தேர்தல் ரிசல்ட் 2021: வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்றுகளில் எப்படி நடைபெறும் தெரியுமா
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்னும் சில மணிநேரங்களில் எண்ணப்பட உள்ளன. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு சாவடி எண்ணிக்கையை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை 15 முதல் 30 வரை செல்லலாம். இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் நள்ளிரவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் இந்த முறை அதிமுக தலைமையிலான கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணி பிரதானமாக களமிறங்கியது. மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்தன. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்த முறை திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் சொல்லிவரும் நிலையில் சாதகமான முடிவு யார் பக்கம் என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரியவரும்.
வாக்கு எண்ணிக்கை பணியில் 35 ஆயிரத்து 836 அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும்.

மேஜைகளும் முகவர்களும்
ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் தனி தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு கூண்டு அமைக்கப்பட்டு 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேஜையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலர் இருப்பார். ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 14 முகவர்களும், ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்குகள் எண்ணும் பணி
மேஜையில் குறிப்பிட்ட சட்டசபைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே வைக்கப்படும். பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விவரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாகி இருக்கும். அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் முகவர்களுக்கு காண்பிப்பார்.

நோட்டா வாக்குகள்
ஒவ்வொரு இயந்திரத்தின் பட்டனை அழுத்தியதும் வாக்குச்சாவடி விவரம், வேட்பாளர் விவரம், பதிவான மொத்த வாக்குகள், வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் திரையில் தெரியும். வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நோட்டாவில் பதிவான வாக்குகள் அறிவிக்கப்படும்.

எத்தனை சுற்றுகள்
இதையடுத்து இயந்திரம் பாதுகாப்பாக மூடி வைக்கப்படும். இந்த நடைமுறை 14 மேஜைகளிலும் முடிந்த பிறகு ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததாக கணக்கிடப்படும். இதையடுத்து 14 மேஜைகளிலும் அடுத்தடுத்த சுற்றுக்கான கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்படும். வாக்கு சாவடி எண்ணிக்கையை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை 15 முதல் 30 வரை செல்ல வாய்ப்புகள் உண்டு.

நள்ளிரவில் முடிவு
வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம், காலை 10மணி முதல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வெளியாக தாமதமாகும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ் வழங்குவார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைமுறை முடிவுக்கு வரும்.
தமிழகத்தில் வென்று ஆட்சியமைக்கப் போவது யார் என்று இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications