ரேஷன் கடையில் பொருட்கள் இன்னும் வாங்கவில்லையா.. ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: இந்த மாதத்தின் கடைசி பணி நாளான 29-ந்தேதி, சனிக்கிழமையாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31-ந்தேதி ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாகும். எனவே, குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, வருகிற 29-ந்தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டு, வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை பொறுத்தவரை ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆகவும் உள்ளன.

அதேநேரம் தமிழ்நாட்டில் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த 34,790 ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 2 கோடி பேருக்கு கைரேகை பெற்று ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் ஏற்படும் தில்லுமுல்லுகளை தவிர்ப்பதற்காக கைரேகைகள் வாங்கப்படுகிறது. அதற்காக ரேஷன் அட்டைகளுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ரேஷன் அட்டையின் உறுப்பினர்கள் நேரில் வந்து தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக 'பாயிண்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதன் காரணமாக ரேஷன் கடைகள் தற்போது முன்பைவிட வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் அனைத்தும் கிடைக்கிறது.எண்ணெய் இல்லை..சர்க்கரை இல்லை.. பருப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் இப்போது முற்றிலும் குறைந்துவிட்டது. மார்ச் மாதத்தை பொறுத்தவரை கணக்கு முடியும் மாதம் ஆகும். அத்துடன் இந்த மாத இறுதியில் அடுத்தடுத்து விடுமுறை வருகிறது. இதன் காரணமாக மாதக்கடைசியில் ரேஷன் கடையில் சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படும்.. இதை கருத்தில் கொண்டு வரும் சனிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "இந்த மாதத்தின் கடைசி பணி நாளான 29-ந்தேதி, சனிக்கிழமையாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31-ந்தேதி ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாகும். எனவே, குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, வருகிற 29-ந்தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டு, வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications