ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்.. அமித் ஷாவுடன் மீட்டிங்.. முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரின் பதவி நீட்டிப்பு தொடர்பாக அரசின் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை இரவு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அண்மையில் தமிழகத்தில் தலைமைச் செயலர் மாற்றப்பட்ட நிலையில், புதிய தலைமைச் செயலர் முருகானந்தம், நேற்று முன்தினம் தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்துப் பெற்று இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆளுநர் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஆளுநர் நடத்திய தேநீர் விருந்து நிகழ்வில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த டீ பார்ட்டியை திமுக புறக்கணித்த நிலையிலும் அரசு சார்பாக முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம், கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பதவி காலத்தை நீட்டித்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநரின் பதவிகாலம் நீட்டிப்பு செய்யப்படவில்லை. அதே நேரத்தில், தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படவும் இல்லை.
இதனால் ஆர்.என்.ரவி தொடர்ந்து, பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் ஆளுநர் ரவி டெல்லி பயணத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பதவி நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications