தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்! மிக முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளை மாற்றி அமைக்க உருவாக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை வழங்கி வருகிறது. அந்த பரிந்துரைகள் அடிப்படையில், தமிழ்நாடு அரசு புதிய உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி வருகிறது. அதன்படி இப்போது திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நமது நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியமான ஒரு பங்கு இருக்கிறது. தேச தந்தையான காந்தி கூட பஞ்சாயத்து ராஜ் என்பதே இந்தியாவின் உண்மையான சுதந்திரம் எனக் குறிப்பிட்டுள்ளார். கிராமங்களே நாட்டின் இதயம், அங்கு சுயராஜ்ஜியம் மற்றும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே அவரது காந்தியின் கனவாக இருந்துள்ளது.

இதனால் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து இதற்காகக் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் மாநிலத்தில் புதிய ஊராட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அப்படித் தான் சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் கூட புதிதாக 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டன.
இந்தச் சூழலில் தான் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகராக அறியப்படும் பல பகுதிகளைக் கொண்ட திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து மாதர்பாக்கம் என்ற ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் பிரிக்கப்பட்டு சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல விழுப்புரத்தில் புதிதாக இரு ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வானூர் ஊராட்சி ஒன்றியம் பிரிக்கப்பட்டு கிளியனூர் ஊராட்சி ஒன்றியமும் விக்கிரவாண்டி மற்றும் கானை ஊராட்சி ஒன்றியங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, புதிதாக கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவண்ணாமலையிலும் தெள்ளார் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு மழையூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து அஞ்செட்டி என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு, சாயல்குடி ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊராட்சிகள் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications