இந்தியாவிலேயே No.1 மாநிலமாக நம்முடைய தமிழகம்..திமுக ஆட்சிதான் பொற்காலம்! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: இன்றைக்கு தமிழ்நாடு தான் இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது எனவும், இந்தியாவிலேயே No.1 மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடந்து தென்னிந்தியாவின் முதன்மையான உள்கட்டமைப்பு கட்டுமான இயந்திர வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," இன்றைக்கு தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக நடத்தப்படுகிற உள்கட்டமைப்புக் கட்டுமான இயந்திர வர்த்தகக் கண்காட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

உதயநிதி ஸ்டாலின்
அதுமட்டுமல்ல, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஒப்பந்ததாரர்களின் நலன் காக்கும் வகையில், மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக, நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், இன்றைக்கு சிறப்பாக உங்கள் ஆதரவோடு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைக்கும், எனக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன தொடர்பு என்றால், நான் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்பு, மக்களுக்கு அறிமுகமான என்னுடைய முதல் படத்தின் பெயர் "ஒரு கல் ஒரு கண்ணாடி" - பொதுப்பணித் துறைக்கும், இந்த தலைப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
தமிழ்நாடு
அதைப்போல, சென்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டு மக்களை நான் சந்திக்கும்போது என்னுடைய கையில் நான் எடுத்துக் கொண்டு போனது ஒரே ஒரு செங்கல் மட்டும் தான். எனவே, அந்த உரிமையோடு இன்றைக்கு நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட இந்த அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் வருகை தந்திருக்கிறீர்கள். உங்கள் முகங்களில் தெரிகிற மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கும் போது, நம்முடைய திராவிட மாடல் அரசு, ஒப்பந்ததாரர்களுக்கு எந்த அளவுக்கு உற்றத்துணையாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
உள்கட்டமைப்பு
அரசு தீட்டுகின்ற திட்டங்களை, கொடுக்கின்ற வாக்குறுதிகளை எல்லாம் செயல்வடிவமாக்கிக் காட்டுவது நீங்கள் தான். பேப்பரில் வரைபடமாக இருக்கும் திட்டங்களை, இன்றைக்கு சாலைகளாக, மேம்பாலங்களாக, உயர்ந்த கட்டடங்களாக மாற்றிக் காட்டுபவர்கள் நீங்கள் தான். உங்களைப் போன்ற எண்ணற்ற ஒப்பந்தக்காரர்களின் உழைப்பால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே அதிநவீன Infrastructure-ஐ கொண்ட முதல் மாநிலமாக இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த முழுப் பெருமையும் உங்களைத்தான் சேரும்.
நம்பர் 1 மாநிலம்
ஓர் ஊர், வளர வேண்டும் என்றால், அந்த ஊரில் இருக்கின்ற அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் சரியாக இருக்க வேண்டும். அப்போது தான், அங்குள்ள மக்களுடைய சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு அது முக்கிய பங்கு வகிக்கும். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தொழில் நிறுவனங்கள் வருகின்றன என்றால், அவர்கள் முதலில் தேர்வு செய்வது இந்தியாவில் முதல் மாநிலம் நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், Ease of Doing Business-இல் மட்டுமல்ல, Infrastructure Facility மற்றும் Road Connectivity-யிலும் இன்றைக்கு தமிழ்நாடு தான் இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது - இந்தியாவிலேயே No.1 மாநிலம் நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.
வளர்ச்சி
நீங்கள் தமிழ்நாட்டுக்காக போடுகிற சாலைகளும் - எழுப்புகிற கட்டடங்களும் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான Road Map என்று சொல்வதில் மிகையல்ல. ஆகவே, இந்த அரசு என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உங்களோடு கைகோர்த்து தமிழ்நாட்டை இன்னும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு செல்வார் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இந்த அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மட்டுமில்லை, அனைத்து ஒப்பந்ததாரர்களும், ஆதரவாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொண்டு இங்கே தொடங்கி வைக்கப்பட்டுள்ள வர்த்தக கண்காட்சி சிறக்கட்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications