அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி.. பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு என்னாச்சு?
சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் அன்பில் மகேஷ். இவர் மாவட்ட வாரியாக அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று அன்பில் மகேஷ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காஞ்சிபுரம், வாலஜாபாத், உத்தரிமேரூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதோடு ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார். ஆய்வுகளை முடித்த பிறகு அன்பில் மகேஷ் காரில் சென்னை நோக்கி திரும்பினார். இந்த வேளையில் திடீரென்று அன்பில் மகேசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்பில் மகேஷ் இன்று உணவு சாப்பிட்டபோது திடீரென்று ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அன்பில் மகேசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சையில் உள்ள அன்பில் மகேஷ் நலமாக இருக்கிறார். அவர் நாளை (அதாவது புதன்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications