அமைச்சர் பிடிஆருக்கு கேக் ஊட்டிய தமிழிசை.. அந்த பக்கம் சு.வெங்கடேசனுக்கு யார்னு பாருங்க! ஒரே பாசமழை!
சென்னை: மதுரையில் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் வெட்டி ஊட்டியது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
சென்னை - திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூர், விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா-புரி, ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.

வந்தே பாரத்: திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 7 மணி 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடையும். இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும்.
நெல்லையில் இருந்து வந்தே பாரத் ரயிலை மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து அந்த ரயிலேயே பயணம் செய்தனர். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் மதுரை ரயில் நிலைய சந்திப்பை வந்தடைந்தது.
மதுரையில் கேக் கட்டிங்: மதுரையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வந்தே பாரத் ரயிலை போன்று உருவாக்கப்பட்ட கேக்கை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்து வெட்டினர்.
கேக் துண்டை எடுத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார். பாஜக தொண்டர்கள்'பாரத் மாதா கி ஜெ'என கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட தமிழிசை சௌந்தரராஜன், 'வந்தே பாரத்! வந்தே மாதரம்' என கோஷமிடுமாறு கூறினார். அவர்களும் வந்தே பாரத் எனக் கோஷமிட்டனர். திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அமைச்சருக்கு கேக் ஊட்டியது அங்கிருந்தோரை புருவம் உயர்த்தச் செய்தது.

அடடே.. அதுக்கு மேல!: அதேபோல, பாஜக பொதுச்செயலாளர் பேராசியர் ராம.சீனிவாசன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கேக்கை ஊட்டிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இருவரும் தொலைக்காட்சி விவாதங்களில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்வார்கள். ஆனால், இன்று பாஜகவின் ராம.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு கேக் ஊட்டிவிட்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் உக்கிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் பாஜக மற்றும் 'இந்தியா' கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாறி மாற்றி பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் நடந்த வந்தே பாரத் நிகழ்ச்சியில் எதிரெதிர் தரப்பினர் கேக் ஊட்டிக்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications