விடிஞ்சா பொங்கல்... இரவிலும் களத்தில் இறங்கிய முதல்வர்.. சாலைகளை சீரமைக்கும் பணிகளை அதிரடி ஆய்வு!
சென்னை: இரவு ஊரடங்கைப் பயன்படுத்தி சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்திற்குப் பின்னர் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கட்டுப்பாடு நடவடிக்கை
கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இது தொடர்பாக இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியிருந்தார். வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இரவு ஊரடங்கு
அதன்படி தமிழ்நாட்டில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை காலை 5 மணி வரை அமலில் இருக்கும் இரவு ஊரடங்கு நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் உட்பட அத்தியாவசிய காரணங்களைத் தவிர இதர காரணங்களுக்குப் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்பு
இதனால் இரவு நேரங்களில் தலைநகர் சென்னை முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது. இரவு நேரங்களில் எந்த வாகன நடமாட்டமும் இல்லாத சூழலில் அதைப் பயன்படுத்தி சாலைப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மழைக் காலத்தில் நகரின் பல முக்கிய சாலைகள் சேதமடைந்திருந்த நிலையில், இந்த இரவு ஊரடங்கு நேரத்தில் அதைச் சீரமைக்கும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

முதல்வர் ஆய்வு
இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்பு பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை தேனாம்பேட்டை மண்டலம் வாரம் சாலை மற்றும் மகாலிங்கம் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சேதமடைந்த சாலைகள்
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.01.2022) பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்தில், மழையின் காரணமாக சேதமடைந்த வாரன் சாலை மற்றும் மகாலிங்கம் சாலைகளை புதிய சாலைகளாக அமைக்கும் பணிகளை இரவு நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேதமடைந்த பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை கணக்கெடுப்பு செய்து புதிய சாலைகள் அமைக்கவும், பணிகளை விரைவாக தொடங்கிடவும், பணி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு சாலையின் தரம் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க 312 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 1,656 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் சீரமைப்புப் பணிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Recommended Video

முதல்வர் ஆய்வு
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (13.01.2022) இரவு தேனாம்பேட்டை மண்டலம், வாரன் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அகழ்ந்தெடுக்கும் (Milling) பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மகாலிங்கம் சாலையில் தார்க்கலவையில் தாரின் சதவீதம் சரியான விகிதத்தில் உள்ளதா எனவும், சாலையில் மழைநீர் தேங்காவண்ணம் சரியான சாய் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், ஆய்வு செய்தார். மேலும், சாலை அமைக்கும் போது தாரின் வெப்பநிலை சரியான அளவிற்கு இருப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications