தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை.. கூடுதலாக 50 லட்சம் டோஸ்களை அனுப்புங்கள்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டில் மக்கள்தொகை, கொரோனா பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூடுதல் தடுப்பூசிகளை விரைவாக வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகம் மெல்லக் குறைந்து வருகிறது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசு வேகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், மாநிலத்தில் தேவைக்கு ஏற்றப்படி தடுப்பூசிகள் இல்லாததால், தடுப்பூசி பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை
இந்நிலையில், தமிழகத்திற்குக் கூடுதல் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "செங்கல்பட்டில் அமைந்துள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். தற்போது தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, இது குறித்து மத்திய அரசு விரைவாகத் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.

தடுப்பூசி தேவை
கடந்த ஒரு மாதத்தில் அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகத் தடுப்பூசி அச்சம் மக்களிடம் அகன்றுள்ளது. அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாநிலத்தில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் மக்கள் தொகை, கொரோனா பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதில்லை.

50 லட்சம் டோஸ்கள்
இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு மத்திய அரசு மூலமும் பிற வழிகள் மூலமும் உடனடியாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் சிறப்பு ஒதுக்கீடாக ஒதுக்க வேண்டும். தமிழகத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட 16.74 லட்சம் டோஸ்களை காட்டிலும் கூடுதலாக 25.84 லட்சம் டோஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும், முன்பு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ததைச் சரி செய்ய ஏதுவாக 50 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முடங்கும் அபாயம்
தமிழ்நாட்டில் கையிருப்பிலிருந்து அனைத்து தடுப்பூசிகளும் கிட்டதட்ட முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. இதனால் தடுப்பூசி பணிகள் மாநிலத்தில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஜூன் மாதத்திற்கான தடுப்பூசியை முதல் வாரத்திலேயே அனுப்பிட வேண்டும். இதன் மூலம் தடுப்பூசி பணிகள் எந்த பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெறும்" என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தளர்வுகளற்ற ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 24ஆம் தேதி தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் மே 31 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பிறகு ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதில் மளிகை, காய்கறி கடைகளுக்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தளர்வுகளற்ற ஊரடங்கிற்கு பிறகே மாநிலத்தில் வைரஸ் பரவல் குறையத் தொடங்கியது.












Click it and Unblock the Notifications