குட்நியூஸ்! உருவாகும் புதிய தாழ்வுப் பகுதி! இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் மழை! எங்கு பெய்யும்?
சென்னை: வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைகாலம் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை என்றாலும் வெப்பம் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.
இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

சென்னை
அதிலும் தமிழ்நாட்டில் பிற்பகல் நேரத்தில் வெப்பநிலை அளவு 38-39 டிகிரி செல்ஸியஸ் வரை பல மாவட்டங்களில் பதிவாகி உள்ளது. அதிலும் கடந்த வாரம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை தாண்டியது. அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 40.5 செல்சியஸ் (104.5 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் கடந்த வாரம் பதிவானது.

மழை வானிலை
அதேபோல் மதுரை நகரில் 39.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியிருந்தது. ஏப்ரல் முதல் வாரம் முழுக்கவே தமிழ்நாடு முழுக்க வெப்பநிலை அதிகமாக இருந்தது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒரு நாள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசான மழை பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாய்ப்பு குறைவு
இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். மேலும் வெப்பச்சலனம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு குறைவு. தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் இதனால் கனமழை பெய்ய போகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், தென்காசி, கோவை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி., நீலகிரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications