இந்த இடங்களில் மழை வெளுத்துவாங்கும்.. 2015 பெருவெள்ளம் போல இருக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்
சென்னை: புதன்கிழமை (நவ. 10) மாலை தொடங்கி இரவு வரை சுமார் 12 முதல் 14 மணி நேரத்திற்குச் சென்னை தொடங்கி கடலூர், டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 26ஆம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதலே மாநிலத்தில் பரவலாகப் பெய்து வருகிறது
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சென்னை மிகக் குறுகிய நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்து.

சென்னை கனமழை
தாம்பரம், கிண்டி, வேளச்சேரி, கோயம்பேடு, அண்ணாசாலை, சேப்பாக்கம் என நகரின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏறப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டர் கொண்டு வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சில முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இந்நிலையில், புதன்கிழமை (நவ. 10) மாலை தொடங்கி இரவு வரை சுமார் 12 முதல் 14 மணி நேரத்திற்குச் சென்னை தொடங்கி கடலூர், டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக் லைவ்-இல் பேசிய அவர், "நாகை மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 21 செமீ மழைப் பதிவானது. அதேபோல கடலூர் மற்றும் டெல்டா பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது

எப்போது பெய்யும்
வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் நாளை தினம் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரம் இது புயலாக மாற வாய்ப்பில்லை. தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த பகுதிகளால் நமக்கு எப்போதும் மழை கிடைக்கும். கடந்த காலங்களிலும் இப்படி தான் மழை பெய்துள்ளது. தற்போதும் அதே நிலைமை தான் உள்ளது.

எங்கெல்லாம் பெய்யும்
எனவே கடலூர் தொடங்கி திருவள்ளூர், சென்னை, தெற்கு ஆந்திரா வரை கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மதியம் வரை மழை விட்டுவிட்டுப் பெய்யும். மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மதியம் தொடங்கி 12 முதல் 14 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஒரு நாள் இரவு
எனவே, புதன் இரவு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நள்ளிரவுக்குப் பின்னரே மழை குறையத் தொடங்கும். ஆந்திராவில் சித்தூர், நல்லூர் பகுதிகளில் மழை பெய்யும். பூண்டி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அரசு அறிவிப்புகளைக் கேட்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதன்கிழமை ஒரு நாளை தாண்டிவிட்டால் போதும். அதன் பிறகு இதேபோன்ற நிலை இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியும்.

2015 பெருவெள்ளம்
2015இல் சென்னையின் பல முக்கிய பகுதிகளிலும் 300மிமீ மழை பெய்தது. அதேநேரம் தாம்பரம் மூடிச்சூர் போன்ற பகுதிகளில் 500 மிமீ வரை மழைப் பதிவானது. ஒரே நேரத்திலும் நகரிலும் புறநகரிலும் அதிக மழை பெய்ததாலேயே அந்த நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு எப்படி மழை பெய்யப் போகிறது என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். தற்போது மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

பலத்த காற்று இருக்குமா
புதன்கிழமை டெல்டா, கடலூர் பகுதிகளில் மழை பெய்யும். நாளை மதியத்திற்குப் பிறகு டெல்டா பகுதிகளில் மழை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம் மாலை நேரத்தில் சென்னை, கடலூர் பகுதிகளில் மழை அதிகரிக்கும். அடுத்த ஒன்று அல்லது 1.5 நாட்களுக்கு மழை பெய்யும். வடசென்னை தென்சென்னை என இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும். அதேநேரம் வரதா புயலைப் போலப் பலத்த காற்று வீசும் வாய்ப்புகள் குறைவு" என்று அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications