அள்ளிக் குவித்த டாஸ்மாக்.. ரூ. 45,855 கோடி வருமானம்.. முந்தைய ஆண்டை விட எவ்வளவு அதிகம் தெரியுமா?
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று தமிழக சட்டசபையில் மதுவிலக்கு துறை கொள்கை விளக்க குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2023 - 24 ஆம் ஆண்டில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 12,431 வழக்குகள் பதியப்பட்டு, 12,422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன் 4,64,152 லிட்டர் கள்ள சாராயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பை துறை அமைச்சர் முத்துசாமி இன்று சமர்ப்பித்தார். அதில் தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.45,855.67 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,734.54 கோடி கூடுதலாகும்.
2022-23ல் டாஸ்மாக் மூலம் ரூ.44,121.13 கோடி வருவாய் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எரி சாராய கடத்தல், போலி மதுபானம் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 101 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலகுகள் செயல்பட்டு வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி மதுபான கடத்தலை தடுக்க மாநிலம் முழுவதும் 45 நிரந்தர மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2023 - 24 ஆண்டில் எரிசாராய கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12,431 விஷச் சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,422 குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். 4.64 லட்ச லிட்டர் விஷச் சாராயம் அழிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெத்தனால் தயாரிக்கும் அனைத்து தொழிற்சாலைகள், மெத்தனால் வைத்திருக்க உரிமம் பெற்ற ஆலைகள் ஆகியவற்றில் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சோதனையிட வலியுறுத்துப்பட்டு உள்ளதாகவும் மெத்தனால் உரிமம் வைத்திருக்கும் அலகுகளை கண்காணிக்கவும், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications