"என்னை விமர்சிப்பவர்களில் பாதி பேருக்கு.. ஒழுங்கா தமிழே தெரியாது!" திடீரென கோபப்பட்ட ஆளுநர் தமிழிசை
சென்னை: திருவள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை, இந்த விவகாரத்தில் தன்னை விமர்சிப்பவர்களில் பாதிப் பேருக்குத் தமிழில் பேச, எழுதத் தெரியாது என்று சாடியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் "மண்ணும் மரபும்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அங்கிருந்த பாரம்பரிய உணவுப் பொருட்கள், கைவினை பொருட்களைப் பார்வையிட்டார்.

தமிழிசை சௌந்தரராஜன்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "மரபுகளை மீட்டெடுக்கும் சூழலில் நாம் உள்ளோம். கொரோனா தான் அதை கற்று கொடுத்துள்ளது. பாரம்பரிய உணவிலும், பாரம்பரிய சிகிச்சை முறையிலும் எதிர்ப்புச் சக்தி உள்ளது. இதை மீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தில் வேர்களைத் தேடி மரபுகளைக் காப்பாற்ற வேண்டும்.

தவறாக எழுதுகிறார்கள்
மொழியைக் கொண்டாடுவதில் தமிழர்கள் என்றுமே மிகப் பெருமை வாய்ந்தவர்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவையில் புதிய கல்விக் கொள்கை தொடங்கப்படும் என்றும் மற்றொரு மொழியை கற்றுக் கொள்வதில் தவறில்லை என நான் கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் எதை எதையோ திணிப்பதாக எழுதுகிறார்கள். எல்லாருக்கும் இருப்பதை விட எனக்குத் தமிழ்ப் பற்று அதிகம்.

பேச எழுத முடியாது
தமிழ் எனது உயிரிலும் மட்டுமல்ல, எனது பெயரிலும் உள்ளது. நல்லதை எடுத்துக்கொண்டு இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வோம் என்பது எனது தாழ்மையான கருத்து. மொழி அரசியலைச் செய்து கொண்டு இருக்கக் கூடாது. தமிழ் மொழியை வேகமாக கற்றுக் கொள்ள வேண்டும். என்னை விமர்சனம் செய்யும் பாதிப் பேருக்குத் தமிழில் பெயரில்லை. தமிழில் பேச முடியாது, பிழை இல்லாமல் எழுத முடியாது. நான் எல்லா விதத்திலும் தமிழ்ப் பற்று உள்ளவர் என்றார்.

சீட் கேட்கிறார்கள்
"ஒரு மாவட்டத்தில் ஒரு உற்பத்தி" என்ற முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தொழிற்கல்வியைத் தமிழில் கொண்டு வரப் பிரதமர் வலியுறுத்தியும், அந்தந்த மாநில அரசு செய்ய மறுக்கிறது. நீட் தேர்வைத் தமிழில் எழுதக் கூறுகிறார். தமிழை எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? இந்தியை வேண்டாம் எனக் கூறுபவர்கள், கேந்திரிய வித்யாலயாவில் சீட் வாங்கி தரச் சொல்கின்றனர். பேசுவது ஒன்றாகவும் நடந்து கொள்வது ஒன்றாகவுமே இருக்கிறது.ஆனால் நாங்கள் அப்படியில்லை எனவும் உள்ளதை உள்ளபடி பேசுகிறோம்.

தமிழ் நமது உயிர்
தமிழ் நமது உயிர்.. இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ளலாம் என்று மட்டுமே புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. அது ஆங்கிலமாக இருக்கலாம். மற்ற மொழியாக இருக்கலாம். இதைச் சொன்ன உடன் பாய்ந்து வருகின்றனர். இது தொடர்பான விவாதத்திற்கு நான் தயார். இணையத்தில் தவறாகத் தாக்குதல் நடத்தாதீர்கள். அனைவரும் இணைந்து பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்" என்றார்.
Recommended Video

கை கூப்பி
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "கைகுலுக்குவதைத் தவிர்த்து தமிழர் பாரம்பரியமான கை கூப்பி வணங்குவதை கொரோனா மீட்டெடுத்துக் கொடுத்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை மறந்து மேல்நாட்டு உணவு வகைகள் தற்போதைய தலைமுறையை ஆட்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள உணவுகளில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதை கொரோனா காலத்தில் வெளி நாட்டினர் தெரிந்து கொண்டனர். நான் அலோபதி மருத்துவராக இருந்தாலும் எனக்கு நாட்டு மருத்துவத்தில் பிடிப்பு அதிகம்" என்றார்.












Click it and Unblock the Notifications