திமுகவுக்கு குட்பை? விஜய் கட்சியில் தாடி பாலாஜி! தமிழிசைக்கு "கெடு விதித்த" காமெடி நடிகர்
சென்னை: எச். வினோத் நடிக்கும் படம்தான் தனது கடைசிப் படம் என நடிகர் விஜய் கூறுவதை தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த தாடி பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
தாடி பாலாஜி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து புகைப்படம் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் விஜய் கட்சியின் பெயரை அறிவிக்கும் முன்னர் கூட விஜய் மக்கள் இயக்கத்தினரின் தண்ணீர் பந்தல் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலாஜி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட் திரைப்படத்திற்கு பிறகு எச். வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம் தான் கடைசி படம் என நடிகர் விஜய் அறிவித்துள்ளார் இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது: இதுதான் கடைசி படமா என தெரியவில்லை. இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும்.
இதற்கு முன்பு கடைசி படம் என்றுதான் சொன்னார். அதற்கு பிறகு இப்போது ஒரு படம். எத்தனை கடைசிப் படம் என தெரியவில்லை. புது அரசியல்வாதிக் பேசுவதையெல்லாம் எந்த அளவுக்கு நம்ப முடியும் என தெரியவில்லை.
மாநாடு நடத்துவது சவாலான விஷயம் என அவரே கூறியிருக்கிறார். ஆனாலும் விஜய் மாநாட்டை சிறப்பாக நடத்திவிடுவார். ஆனால் கட்சி எப்படி நடத்துவார் என்றுதான் தெரியவில்லை. வேலையை விட்டுவிட்டு மாநாட்டிற்கு வாருங்கள் என கூறுவது சரியான அறிவுரை இல்லை. இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாடி பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்காக நேற்று பூஜை போடப்பட்டது. அவருடைய திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. இன்று அவருக்காக முகப்பேர் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையில் அவருக்காக கட்சித் தொண்டர்கள் பூஜை செய்தனர்.
இதில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு நான் ஒரு முக்கியமான செய்தியை சொல்வதாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன். என்னை புஸ்ஸி ஆனந்த் போனில் அழைத்திருந்தார்.
பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு போனால் எனக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது "பாலாஜியை மாநாட்டுக்கு பணியாற்றச் சொல்லுங்கள்" என விஜய் சொன்னதாக என்னிடம் புஸ்ஸி சொன்னார்.
இதனால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவர் எனக்கு கொடுத்த பணியை நான் நிச்சயம் செய்வேன். தமிழிசை புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்ததால் விஜய் சொல்வதை தண்ணீரில் எழுதி வைக்கணும் என சொல்கிறார் போல! ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவரை ஊக்கப்படுத்த யாருமே இல்லை.
அவர் வந்தால்தானே என்ன செய்ய போகிறார், என்ன பேச போகிறார் என்பது தெரியும் அவர் வருவதற்கு முன்பு நீங்களே பேசிவிட்டால் எப்படி? நீங்கள் எங்களை பற்றி பேசுவதே எங்களுக்கு கூடுதல் பலம்தான். தலைவர் விஜய் அமைதியாகவே இருக்கிறார். நீங்கள்தான் அவரை பற்றி பேசுகிறீர்கள். தலைவர்தான் முன்னேறி வருகிறார்.
அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றதும் அவர்களுக்கு நிச்சயம் தெரியும். மாநாடு நடத்துவது எளிது, கட்சி நடத்துவது கஷ்டம் என தமிழிசை சொல்கிறார். எதுவாக இருந்தாலும் மாநாடு முடிந்ததும் அவரை பேச சொல்லுங்கள். கட்சிக்கும் கட்சித் தலைவருக்கும் நாங்கள் எந்த விதமான பாதகத்தையும் ஏற்படுத்த மாட்டோம். அவர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்வோம். இவ்வாறு தாடி பாலாஜி பேசினார்.












Click it and Unblock the Notifications