விஜய் முதல்வராக மாட்டாரா? மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறாராம்! அடித்து சொல்லும் பிரபல நடிகை
சென்னை: முழு நேர அரசியல்வாதியாக இருப்பதால் ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துவிட்டார். இதற்கிடையே அடுத்தாண்டு மார்ச் மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், நவம்பர் முதல் நடிகர் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்குவார் என நடிகை சிந்தியா லூர்டே கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜய் இப்போது தவெக கட்சியை நடத்தி வருகிறார். அவரது நடிப்பில் ஜனநாயகன் கடைசி படமாக உருவாகியுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்க மாட்டேன் என அறிவித்துவிட்டார். இதன் பிறகு தீவிர அரசியலில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறி வருகிறார். இதனால் ஜனநாயகன் படமே அவருக்குக் கடைசி படமாக இருக்கும்!

விஜய் அரசியல்
அதேநேரம் தேர்தலுக்காகவே விஜய் இதுபோல சொல்லி இருக்கிறார் என்றும் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு மீண்டும் அவர் படங்களில் நடிக்க ஆரம்பிப்பார் என்றும் எதிர்க்கட்சியினர் சொல்லி வருகிறார்கள். விஜய் மீண்டும் சினிமாவில் நடிப்பாரா இல்லையா என்பது குறித்தே கூட இணையத்தில் விவாதம் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் சிந்தியா லூர்டே கூறியுள்ள சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது.
ஸ்ரீகாந்த் உடன் "தினசரி" படத்தில் நடித்தவர் தான் சிந்தியா லூர்டே.. அந்த படத்தை அவரே தயாரித்து, ஹீரோயினாகவும் நடித்திருந்தார். இதற்கிடையே அவரது அடுத்த படம் ஜனவரி 2ம் தேதி ரிலீஸாகிறது. அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா இயக்கத்தில் அனலி என்ற படத்தில் சிந்தியா லூர்டே நடித்துள்ளார். ஜனவரி 2ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
சிந்தியா லூர்டே
அப்போது பேசிய சிந்தியா லூர்டே, "வர்ணாஷ்ரமம், தினசரி படங்களைத் தொடர்ந்து 3வது படமாக'அனலி' உருவாகியுள்ளது.. இதில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். வழக்கமான ஹீரோயின் போல இதில் இருக்காது. கொஞ்சம் தனித்துவமான கதை. விஜயசாந்தி போலப் படத்தில் நடித்துள்ளேன்.. விஜயசாந்தி எப்படி 90களில் தமிழ் சினிமாவில் ஆக்ஷனில் கலக்கி இருந்தாரோ.. அதேபோல நானும் முதல் முறையாக ஒரு முழுநீள ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளேன். பல காட்சிகளில் எந்தவொரு டூப்பும் இல்லாமல் நடித்துள்ளேன்" என்றார்.
விஜய் நடிப்பார்
அப்போது அடுத்த இரண்டு ஆண்டுகளில் விஜய் தனது தயாரிப்பில் நடிப்பார் என்றும் அந்தப் படத்தில் விஜய் உடன் ஜோடியாக நடிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது இந்தப் பேச்சு விவாதமாகியுள்ளது.
இது தொடர்பாக சிந்தியா மேலும் கூறுகையில், "அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. மே மாதம் தேர்தல் முடிவுகள் வரும். அதைத் தொடர்ந்து நவம்பரில் அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பிப்பார். நான் உறுதியாகச் சொல்கிறேன். நிச்சயம் நவம்பர் முதல் மீண்டும் நடிக்க வருவார். இன்று சொல்கிறேன்.. நிச்சயம் நவம்பரில் நடிக்க வருவார்" என்றார்.
ஜோதிடம் பார்த்து சொல்கிறேன்
முதல்வரானால் அவரால் படங்களில் நடிக்க முடியாது.. அப்படி என்றால் அவர் முதல்வராக மாட்டாரா எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நிச்சயம் நான் சொல்வது நடிக்கும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "நான் சின்ன வயதில் இருந்தே கொஞ்சம் ஜோதிடம் பார்ப்பேன். ஜோதிடம் தெரியும். அதை வைத்துத் தான் நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications