சாப்பாட்டுக்கே கஷ்டம்.. நாடக கலைஞரானேன்.. ரசிகர்கள் ஏராளம்.. பிக்பாஸ் போட்டியாளர் தாமரை
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 ஆவது போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் நாடக கலைஞர் தாமரை செல்வி. இவருடன் சூப்பர் சிங்கர் முத்துச் சிற்பி நாரதர் வேடமிட்டு ஒரு நாடகத்தை நடத்தினார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது. 100 நாட்கள் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் கடைசியில் அந்த வீட்டில் யார் இருக்கிறார்களோ அவரே வெற்றியாளர், அவருக்கு 50 லட்சம் பணமும் கோப்பையும் வழங்கப்படும்.
100 நாட்கள் பலதரப்பட்ட மக்களுடன் தங்குவது என்பது சவாலான விஷயம். குடும்பத்திற்குள்ளேயே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான குணாதிசயங்களை கொண்டவர்களாவர். அப்படியிருக்கும் போதே நிறைய மனக்கசப்புகள் வருகின்றன.

அனுசரிப்பு
ஆனால் இந்த வீட்டில் 18 பேர் உள்ளனர். ஒவ்வொருத்தரையும் அனுசரித்துக் கொண்டு மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. போலியாக நடித்தாலும் எடுபடாது. இந்த நிகழ்ச்சியில் சினிமா பின்னணி, மாடலிங் துறையின் அனுபவம், பாடகர், பாடகி என போட்டியாளர்கள் தேர்வு இருந்தது. ஆனால் இந்த முறை சாமானியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப நண்பர்
அவ்வாறு தனது திறமையால் கிராமத்தினரே பாராட்டும் நாடக கலைஞர் தாமரை செல்வி. இவரது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது கணவருக்கு திண்டுக்கல் மாவட்டம். சிறிய வயதிலேயே உணவுக்கே கஷ்டமாக இருந்ததால் குடும்ப நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் தாமரைச் செல்வியை தெருக் கூத்து நாடகத்தில் சேர்த்து விட்டனர்.

பெண் ரசிகர்கள்
அன்று முதல் அதன் நுணுக்கங்களை கற்று கொண்டு வள்ளி தெய்வானை நாடகத்தை நடத்தி வருகிறார். இவர் காமெடியாக பேசுவதால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். தெருக்கூத்து நாடகங்களில் தான் ஆபாசமாக உடை அணியாமல் ஆபாச வார்த்தைகள் பேசாததால் ஆண் ரசிகர்களைவிட தனக்கு பெண் ரசிகர்களே அதிகம் என்கிறார்.

நெகிழ்ச்சி
மேலும் தான் தெருக்கூத்தில் நடிக்க சென்றவுடன் ஒரு வேளை உணவையாவது தனது குடும்பத்தினர் உண்டனர் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். மேலும் தனது நகைச்சுவை நாடகத்தால் திருவிழாக் காலங்களில் ஒரே நாளில் 4 அல்லது 5 நாடகங்கள் ஒப்புக் கொண்ட போதிலும் மேலும் சில நாடகங்களை நடத்துமாறு மற்ற ஊர் மக்கள் கேட்பார்கள். நானும் ரெஸ்டே இல்லாமல் நடித்து கொடுத்தேன்.

கொரோனா பரவல்
இப்படியே போய் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென கொரோனா பரவலால் நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் என வேலையில்லாமல் கோயில் திருவிழாக்கள் நடைபெறாமலும் பட்டினி கிடக்க நேர்ந்தது. ஆனாலும் ரசிகர்கள் பொருள் உதவி செய்ததால் குடும்பத்தில் பெரிய அளவில் திண்டாட்டம் இல்லாமல் இருக்க முடிந்தது என்றார். கூட்டம் சேர்ந்தால்தான் நாங்கள் 4 காசு பார்க்க முடியும். ஆனால் இந்த கொரோனாவால் கூட்டமே சேரக் கூடாது என கூறிவிட்டனர்.

எல்லோருக்கும் என்னை பிடிக்கும்
நான் எல்லோருடனும் ஒத்து போய்விடுவேன். எனவே இந்த வீட்டில் எனக்கு எல்லாரையும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் தாமரை செல்வி. நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, நாடக கலைஞர் தாமரைச் செல்வி என பாரம்பரிய கலையை சேர்ந்த இருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதால் அவர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications