சைலண்டாய் வேலையை ஆரம்பித்த அரசு..பேப்பரை பார்த்ததும் ஷாக்! பதற்றத்தில் பரந்தூர் மக்கள்..என்னாச்சு?
சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அந்த கிராமத்தில் நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நேற்றிரவு முதல் அப்பகுதி மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. முன்னதாக டிட்கோ பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கியது.
இதன் சுமார் 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக இந்த விமான நிலையம் உருவாக்கப்படும் எனவும், 100 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் மூன்று டெர்மினல்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டது. மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு சார்பில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து டிட்கோ நிறுவனம் 2023ல் பரந்தூர் விமான நிலையத்திற்கு தள அனுமதிக்கான விண்ணப்பத்தை அனுப்பியது. மேலும், தள அனுமதி தவிர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்ட அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றிற்கும் விண்ணப்பித்தது. தற்போது பரந்தூர் விமான நிலைய அமைவிடத்திற்கு அனுமதி வழங்கி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

இதனையடுத்து பரந்தூர், ஏகணாபுரம் தவிர்த்து பிற இடங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் நில எடுப்பு பணிகளை டிட்கோ தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக அதிகாரிகள் தற்போது நிலம் எடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நில எடுப்பு தொடர்பாக பிரபல நாளிதழ்களில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விளம்பரத்தை பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) புதிய பசுமை வழி விமான நிலைய திட்டம், அவர்களிடம் ஆட்சேபனைகள்/கோரிக்கைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் ஆட்சேபனைகள் கோரிக்கைகள் வந்தால் அவை நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாட்களாக அப்பகுதி மக்கள் போராடி வந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications