சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை முதல் 25 புறநகர் மின் ரயில் நேரம் மாற்றம்
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் வசதிக்காகவும், ரயிலின் இயக்க காரணங்களுக்காகவும் பல்வேறு மார்க்கங்களில் நாளை முதல் 25 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவையை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்த ரயில் சேவை ஒருநாள் பாதிக்கப்பட்டாலே மொத்த சென்னையும் ஸ்தம்பித்துவிடும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், பொதுமக்கள் என பலரும் ரயில் போக்குவரத்தை நம்பியே உள்ளனர். குறைந்த கட்டணம், விரைவு சேவை போன்ற காரணத்தால் சென்னை மக்களின் முதல் தேர்வாக மின்சார ரயில்களே உள்ளன.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் காரணமாக சில மெயில் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காகவும், ரயில் இயக்க காரணங்களுக்காகவும் சென்னை ரயில்வே கோட்டத்தில் சில மார்க்கங்களில் புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை சென்ட்ரல் - திருத்தணி செல்லும் ரயில்களின் நேரம் மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு உள்ளிட்ட மார்க்கங்களில் குறிப்பிட்ட சில ரயில்களின் நேரம், ரயில் எண்கள் மாற்றம் செய்யப்படுகின்றன. ஜனவரி 2 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. வார நாட்களில் மட்டுமே இந்த ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தவிர புறநகர் மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னை சென்ட்ரல் - திருத்தணி காலை 7.25 மணி ரயில் ஆவடியில் காலை 8.10 மணிக்கும், சென்ட்ரல் - திருவள்ளூர் காலை 7.35 மணி ரயில், ஆவடியில் காலை 8.15 மணிக்கும் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - திருத்தணி இரவு 8.10 மணி ரயில், கடற்கரை - திருவள்ளூர் இரவு 8.15 மணி ரயில், சென்ட்ரல் - அரக்கோணம் இரவு 9.10 மணி ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
கடற்கரை - ஆவடி இரவு 9 மணி ரயில், சென்ட்ரல் - பட்டாபிராம் இரவு 10.40 மணி ரயில், கடற்கரை - ஆவடி இரவு 10.10 மணி ரயில் ஆகியவற்றின் எண் மாற்றப்படுகிறது. திருத்தணி - சென்ட்ரல் மார்க்கத்தில் 6 ரயில்களின் நேரம், எண் மாற்றம் செய்யப்பட உள்ளது.
கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் 15 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. கடற்கரை - தாம்பரம் காலை 6.01 மணி, காலை 10.01 மணி ரயில், கடற்கரை - செங்கல்பட்டு மாலை 5.55 மணி ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றப்படுகிறது.
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் - அரக்கோணம் மார்க்கத்தில் 22 ரயில்களின் நேரம், எண் மாற்றப்படுகிறது. ஆவடி - சூலூர்பேட்டை மார்க்கம் (வழி: கும்மிடிப்பூண்டி), கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.
அந்த வகையில், மொத்தம் 25 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. 40க்கும் மேற்பட்ட ரயில்களின் எண்கள் மாற்றப்படுகின்றன என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications