சட்டசபைத் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணி கிடையாது... திராவிடம் எப்போதும் இருக்கும் - கமல்ஹாசன்
திராவிடம் என்ற வார்த்தை தேசியகீதம் உள்ளவரை இருக்கும். நாம் சொல்வது கழகங்களுடன் கூட்டணி இல்லை என்பதை தான் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் சிறிய திருத்தம், கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சட்டசபை தேர்தல் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல் தனது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி முதன்முதலாக அரசியல் களம் கண்டது. தற்போது 2021 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் பிரச்சாரத்திற்கு தயாராகியுள்ளது.
கடந்த வாரம் தி. நகரில் உள்ள ஹோட்டலிவ் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள், மண்டல மற்றும் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்தனர்.

நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
இரண்டாம் கட்டமாக தி. நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
நேற்று சென்னை, காஞ்சி புரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சட்டசபை தேர்தல் கள நிலவரம்
கூட்டத்தில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். சட்டசபை தொகுதிகளின் கள நிலவரம் குறித்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.

ஊழல் அதிகரிப்பு
தமிழகத்துக்கு புதிய மாற்றத்தை கொண்டு வரப்போகும் கள வீரர்களாக நீங்கள் வெளியே செல்கிறீர்கள். முதலமைச்சராக அமர்த்துவேன் என்பது ஒரு மனிதனை அல்ல. ஒரு மாற்றத்தை. அதன் கருவிதான் நான். தொடர்ந்து ஊழல் செய்து கொண்டே இருக்கின்றனர். ஒரு பயமும் இல்லை. ராகத்திலேயே எந்த ராகம் பிடிக்கும் என்று கேட்டால் ‘சுருட்டி' என்கிறார்கள்.

கழகங்களுடன் கூட்டணி அல்ல
உங்கள் குரல் சட்டசபையில் கேட்கப் போகிறது. அதற்கான குணாதிசயங்கள் இன்றே வந்தாக வேண்டும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று நான் அறிவித்ததாக கூறுகின்றனர். அதில் ஒரு சின்ன திருத்தம், தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் உள்ளவரை திராவிடம் இருக்கும். அதை அழிக்க முடியாது. அதனால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் சிறிய திருத்தம், கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications