திருமாவளவனின் புது ரூட்.. திமுகவுக்கு வந்த தர்மசங்கடம்.. மென்று விழுங்கும் மதிமுக.. பரபரக்கும் களம்
திருமாவளவன் விசிகவுக்கு தனிச்சின்னம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்
சென்னை: தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக என்ன முடிவு எடுக்க போகின்றன என்று தெரியவில்லை.. இதற்கான பரபரப்புகளும் எகிறி வருகின்றன.
நடக்க போகும் தேர்தலுக்கு தமிழக அரசியல் தயாராகி வருகின்றன.. தேமுதிக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் சார்பில் வேட்பாளர் லிஸ்ட் வெளியாகி கொண்டிருக்கிறது.
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் தனித்து களம் காண்கின்றன.. ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை..

விசிக
இதில் விசிகவும் ஒன்று.. தமிழகம் முழுக்க தேர்தல் நடைபெறும் இடங்களில் எல்லாம், தங்களுக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையிலான சீட்களையே விசிக கேட்கிறதாம்.. ஆனால், அதற்கு திமுக தரப்பில் சிங்கிள் டிஜிட் மட்டுமே தர முடியும் என்று கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. எனினும் ஒருசில இடங்களையும் விசிகவுக்கு சாதகமாக ஒதுக்கி தந்துள்ளது.. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே கொஞ்சம் அதிருப்திதான்.

கம்யூனிஸ்ட்
உதாரணத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தை சொல்லலாம். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 1, 12, 35, 49 ஆகிய 4 வார்டுகளும், உத்தரமேரூர் பேரூராட்சியில் ஒரு வார்டும் தங்களுக்கு ஒதுக்குமாறு திமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் மார்க்சிஸ்ட் வழங்கிய லிஸ்ட்டில் இல்லாத 23வது வார்டை மட்டும் வழங்க வாய்ப்பிருப்பதாக திமுக தெரிவித்துவிட்டது.. இப்படி பல இடங்களில் விசிக நல்ல சான்ஸை பெற்று வந்தாலும், சில இடங்களில் இழுபறியும் நீடிக்கிறது.

உடன்பாடு
விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் நம்பப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், விசிக களப்பணியில் மும்முரமாகி விட்டது.. சில இடங்களில் திமுகவை விட ஸ்பீடு எடுத்து வருகிறது.. திமுகவால் ஒதுக்கப்பட்ட, சில மாவட்டங்களுக்கான வேட்பாளர் லிஸ்ட்டையும் வெளியிட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியதாக கூறப்படுகிறது..

தனித்தன்மை
அந்த கடிதத்தில், "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் தனிச்சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். இதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். தனி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றால் தான் கட்சி வளர்ச்சிக்கு அது பயன்படும்.. நமது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தான் சட்டமன்றத்தில் சுதந்திரமாக பேச முடிகிறது. இவற்றை எல்லாம், நமது தோழர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று திருமா கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கறார் தன்மை
இந்த கடிதம் குறித்த முழு விவரங்கள் தெரியவில்லை என்றாலும், விசிக இப்போதுவரை கறார் காட்டி வருவதே, எந்தவிதத்திலும் தங்களின் தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.. திமுகவை பொறுத்தவரை பெரும்பாலும் உதயசூரியன் சின்னத்திலேயே கூட்டணி கட்சிகளை போட்டியிட சொல்வது வழக்கம்... அதில் மதிமுகவும் விசிகவும் அடக்கம்..

உடன்பாடு
இந்த முறை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு தமிழகம் முழுக்க அனைத்து மாவட்ட அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை... சென்னை திருவள்ளூர் மாவட்டம் சார்பில் திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் மதிமுகவினருக்கு 5 வார்டு எண்ணிக்கையில் குறைவாகவே ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர்.

மதிமுக
இதுகுறித்து துரை வைகோ நேற்று பேசும்போது, "இடப்பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரியாகவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. பெண்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்த சிலருக்கு இடங்களைக் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்' என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.. இதற்காகத்தான், விசிகவும் தேர்தல் சமயங்களில் உஷார் ஆகி இந்த முறையும் தனிச்சின்னம் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது..

பாஜக
தேர்தல் சமயங்களில் எப்போதுமே டபுள் டிஜிட் கோரிக்கையுடன்தான் விசிக பேச்சுவார்த்தையை துவங்கினாலும், கிடைப்பதென்னவோ சிங்கிள் டிஜிட்டாகத்தான் இருக்கும்.. எனினும், போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று விடும்.. அதனால்தான், விசிகவை மட்டும் கையை விட்டு நழுவிவிடாமல், திமுக மேலிடம் மென்மையாகவே கையாண்டு வருகிறது... இந்த முறை விசிக எதிர்பார்த்தது நடக்குமா? என்று தெரியவில்லை.. இப்படி இழுபறியில் பேச்சுவார்த்தை உள்ளதே திமுகவுக்கு ஒருவித தர்மசங்கடம் என்றாலும், இன்னும் 2 நாளில் திமுக கூட்டணிக்கு சுமூக முடிவு எட்டப்படும் என்றும் நம்பப்படுகிறது.

மாநகராட்சி
இதனிடையே மதுரை மாநகராட்சியிலும் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த மாநகராட்சியை பொறுத்தவரை 100 வார்டுகள் உள்ளன... இதில் காங்கிரஸ்-9, கம்யூனிஸ்ட்-8, மதிமுக-3, விசிக-2, மற்ற கட்சிகள்-4 என 26 வார்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கும், திமுகவுக்கு 74 வார்டுகள் என முடிவு செய்யப்பட்டது... அதன்படி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

மதுரை
ஆனால், மதிமுக 3 வார்டுகளுக்கு ஒப்புக் கொண்டாலும், அந்த கட்சி கேட்கும் வார்டுகளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கோருவதாக கூறப்படுகிறது.. இதுதான் அங்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. அதாவது அவனியாபுரம் வார்டு மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.. இதைதான் விசிக கேட்கிறது... மகபூப்பாளையம் வார்டை விசிக கேட்டது.. ஆனால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதை ஒதுக்கவில்லை.. மாறாக, மாடக்குளம் வார்டை விசிகவுக்கு வழங்க திமுக முடிவு செய்தது.. ஆனால், விசிக அதை ஏற்க தயாராக இல்லை.. இப்படி இழுபறி அங்கேயும் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications