வடிவேல் பாணியில் து.முதல்வர் சர்ச்சைக்கு திருமா பதிலடி! ஆதவ் அர்ஜுனை ஆதரித்து பேச்சு
சென்னை: ஆதவ் அர்ஜுனுக்கு எதிராக விசிக இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்து கூறிவரும் நிலையில் விசிகவை வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கட்சிக்குள் வந்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் அளித்த பேட்டி கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி இருந்தது. அவர் 'ஆட்சி அதிகாரத்தில் விசிக பங்குபெற வேண்டும். அதற்காகக் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒரு குறைந்த பட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். 40 ஆண்டுகளாகக் களத்தில் இருக்கின்ற திருமாவளவன் ஏன் துணை முதல்வராக ஆகக்கூடாது. எங்களின் இலக்கு அதுதான்' என்று பேசி இருந்தார்.

அதைத்தாண்டி, '4 ஆண்டுகள் முன்பாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர் துணை முதல்வராகும் போது திருமாவளவன் ஆகக்கூடாதா?' என நேரடியாக அவர் உதயநிதியை தாக்கியதால் சலசலப்பு எழுந்தது. அதைத்தொடர்ந்து நேற்று விமானநிலையத்தில் பேட்டி அளித்த திருமாவளவன், 'திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த சலசலப்பு இல்லை' என்று கூறியிருந்தார். ஆதவ் அர்ஜுன் மீது நடவடிக்கை தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஆனால், அதன் பின்னால் நடைபெற்ற கட்சியினர் கூட்டத்தில் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனை ஆதரித்துப் பேசி இருக்கிறார். ஆதவ் கட்சியை வளர்ப்பதற்காக விசிகவில் இணைந்துள்ளார் என்று அவரை வரவேற்றுப் பேசி இருக்கிறார். திருமாவளவன் பேசும்போது, "நான் தான் ரெளடி..நான் தான் ரெளடி என வடிவேல் சொல்வதைப்போல நான் தான் முதல்வர்..நான் தான் முதல்வர் என்று நாம் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நம் களமும் நம் செயலும்தான் நம்மை அந்த இடத்திற்குக் கொண்டுபோய் நிறுத்தும். அதை மக்கள் பேச வேண்டும். யார் யாரோ அந்த இடத்திற்கு ஆசைப்படுகின்றபோது அந்த இடத்தில் திருமாவளவன் உட்கார்ந்தால் என்ன என்று உழைக்கும் மக்கள் சொல்லட்டும். அதற்கு ஊடகத்தை நம்பி இருப்பதோ அல்லது மற்றவர்களை நம்பி இருப்பதோ பயன்படாது. எப்போதும் மக்களோடு இருப்பதுதான் பயன்தரும்.
கடந்த இரண்டு நாட்களாக ஆதவ் அர்ஜுன் பேசியதை வைத்து திரிக்கிறார்கள். அவர்தான் இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம். அவர்தான் திருமாவளவனை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று பேசுகிறார்கள். திருமாவளவன் ஹீரோவா நடித்து அந்தப்படத்தை இயக்கும் அளவுக்கு இன்னும் யாருக்கும் தகுதி வரவில்லை. ஆதவ் நல்ல எண்ணத்தோடு இந்தக் கட்சியில் வந்து இணைந்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் வேறு கட்சிக்குப் போய் சேர்ந்திருக்க முடியும். நான் அவரை முதன்முதலாகப் பார்த்தபோது அவரது அலுவலகத்தில் ஒரு பக்கம் காந்தி சிலை. மற்றொரு பக்கம் அம்பேத்கர் சிலை வைத்திருந்தார். அதைப் பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காந்தி என்றால் அம்பேத்கருக்குப் பிடிக்காது. அம்பேத்கர் என்றால் காந்திக்குப் பிடிக்காது.
அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு வாசகத்தை அலுவலக சுவரில் ஒட்டி வைத்திருந்தார். அப்போது அவருக்கு எந்தத் தலித் அமைப்புகளுடன் தொடர்பு கிடையாது. ஆதவ்க்கு காந்தியின் சமதர்ம கோட்பாட்டிலும் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு கோட்பாட்டிலும் ஒரு ஈடுபாடு இருந்தது. அதன் பின்னால் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருக்கு விசிக வளரவேண்டும். ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ளது. விசிக ஆட்சி அதிகார பகிர்வில் இடம்பெற வேண்டும் என ஆதவ் நினைக்கிறார். உடனே அதைவைத்து கட்சிக்குள் இரண்டு அணி இருக்கிறது. முரண்பாடு இருக்கிறது என ஊடகங்கள் பேசுகின்றன.

கள்ளக்குறிச்சிக்கு நானாகச் சென்றேன். அங்கே நானாக 'மது ஒழிப்பு' மாநாட்டைக் கட்சியின் உள்ள பிற தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் அறிவித்தேன். ஆனால், இதற்கு ஆதவ் அர்ஜுன் தான் ஐடியா கொடுத்தார் என்று திரித்துச் சொல்கிறார்கள். இதில் ஆதவ்க்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் நம் கட்சிக்கு வந்ததால் விசிகவை சாதிக் கட்சி என முத்திரை குத்த முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் பேசுகிறார்கள். எல்லாம் சமூக ஊடகங்களின் கற்பனை.
1990களில் இந்த இயக்கத்திற்கு நான் தலைமைப் பொறுப்பை ஏற்றபோதே மதுரையில் பேசும்போது, 'என்னுடைய சாதிய அடையாளத்தைப் பார்த்து என் பின்னால் வராதே. நான் சொல்லும் அரசியலில் நம்பிக்கை இருந்தால் என்னோடு வா' என்று சொன்னேன். ஆனால், திரும்பத் திரும்ப விசிகவை சாதிக் கட்சி என்கிறார்கள். இது சாதி ஒழிப்பை உயர்த்தி பிடிக்கின்ற இயக்கம்.
கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள விசிகவுக்கும் திமுகவுக்கும் முரண்பாடு வரும். அது தெரியாதது அல்ல. அதைவிடப் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் முக்கியம் என்பதால் இந்த மாநாட்டை நடத்துகின்றோம். ஒரு கட்சியின் கூட்டணியிலிருந்தால் மற்ற கட்சித் தலைவர்களைப் பார்த்தால் சிரிக்கக்கூடாது என்ற கலாச்சாரம் தமிழ்நாட்டில் நிலவுகிறது.
ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவினர் பிற கட்சியினரைப் பார்க்கவே பயப்படுவார்கள். கூட்டணி வேறு. அரசியல் வேறு. எந்தக் கட்சி கூட்டணியிலிருந்தாலும் ஒருவருக்கு ஒரு நண்பர்களாக இருப்பதில் என்ன தவறு? அந்தக் கலாச்சாரம் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?. எனவே திமுக கூட்டணியில் இருப்பது என்பது பெரிய முடிவு. தமிழ்நாட்டில் நிலவும் மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்துப் போராடுவது என்பது சின்ன சின்ன முடிவு. இந்த இரண்டும் வேறு" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications