என்னம்மா எப்படி இருக்கீங்க.. "நீங்கள் நலமா" பயனாளிகளுடன் வீடியோ காலில் கலந்துரையாடிய மு க ஸ்டாலின்
சென்னை: அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் 'நீங்கள் நலமா' என்ற திட்டம் முதல்வர் முக ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இன்று முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளை நேரடியாக வீடியோகால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (4.7.2024) தலைமைச் செயலகத்திலிருந்து, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் முதல்வரின் முகவரி துறையின் "நீங்கள் நலமா" என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.

சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் மக்களை கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் உயர்வடைய செய்து அவர்களை சமூக நீரோட்டத்திற்குள் கொண்டுவருவதன் மூலம் தமிழ்நாடு சமத்துவ சமுதாயமாக திகழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு பொதுமக்களும் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது.
மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்குடன், மக்களுக்கும் அரசிற்கும் இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற "நீங்கள் நலமா" என்ற புதியதொரு திட்டம் கடந்த 6.3.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.
இத்திட்டம் முதல்வரின் முகவரித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அரசுத் துறைகளின் செயல்பாட்டில் உள்ள முக்கியமான நலத் திட்டங்கள் மற்றும் அரசு துறைகளால் வழங்கப்படும் சேவைகள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டம் பெறப்படுகிறது. அதனடிப்படையில், நலத்திட்டங்களின் பயன்கள் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அரசு வழங்கிடும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வழிவகைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், "நீங்கள் நலமா" வலைத்தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்த விவரத் தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று (4.7.2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு பயனாளிகளை வீடியோகால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த அவர்களது பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்கள்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற கோயம்புத்துரைச் சேர்ந்த திருமதி சித்ரலேகா அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். திருமதி சித்ரலேகா அவர்கள். ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி நிலையத்தை நடத்தி வருவதாகவும், தான் தொழில் தொடங்க கடன் வாங்குவதற்காக மாவட்ட தொழில் மையத்தை அணுகிய போது, அங்குள்ள அலுவலர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிட தமிழ்நாடு அரசு புதிதாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், அதைப் பற்றி விளக்கி கூறினார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தது என்றும், விண்ணப்பித்த பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, ஒரு மாதத்தில் தொழில் தொடங்க ரூ.68,37,000/- மானியத்துடன் கடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது என்றும், தன்னைப் போன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டமாகும் என்றும். இத்திட்டத்தை கொண்டு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சஞ்ஜெய் அவர்களின் தாயாரிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். தான் வீட்டு வேலை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும், மகன் சஞ்ஜெய் நேஷ்னல் பள்ளியில் படித்து வருவதாகவும், மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500/- தொடர்ச்சியாக, வங்கியின் மூலமாக பெற்று வருவதாகவும், மாற்றுத்திறனாளி அலுவலக அதிகாரிகள் தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதந்தோறும் 14-ஆம் தேதி அன்றே ரூ.1,000/- வங்கிக் கணக்கில் வந்து விடுகிறது என்றும், உடன்பிறந்த அண்ணணைப் போன்று உதவி வருவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அப்பணத்தைக் கொண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மூத்த மகனுக்கு ரூ.500/- டியூஷன் கட்டணம் செலுத்தி விடுவதாகவும், மீதமுள்ள பணத்தை இதர செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார்.
"இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48" என்ற திட்டத்தின் கீழ் பயன்பெற்ற இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மணிகண்டன் அவர்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். திரு. மணிகண்டன் தனக்கு சமீபத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டது என்றும், மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், அதற்கு உதவி செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தில் பயன்பெற்று வரும் செங்கல்பட்டு மாவட்டதைச் சேர்ந்த சுகன்யா அவர்களின் சகோதரரிடம் தொலைபேசி மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்பு கொண்டு பேசினார். தான் இரு கண்களையும் இழந்த மாற்றுத்திறனாளி என்றும், தனது அக்கா சுகன்யாவிற்கு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தனது அக்கா மகனும் மூளை வளர்ச்சி குன்றியவன் என்றும் தெரிவித்தார்.
தனக்கும் தனது அக்காவிற்கும் மாதந்தோறும் தலா ரூ.1,500/- ரூபாயும், மேலும் தனது அக்கா மகனுக்கு ரூ.2,000/- மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை தொடர்ந்து வருகிறது என்றும், இந்த உதவித்தொகையை நம்பித்தான் குடும்பமே உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் அலுவலர்களெல்லாம். நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி பயன்பெற்று வரும் கீர்த்திகாஸ்ரீ தாயார் திருமதி சங்கீதா அவர்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். திருமதி சங்கீதா அவர்கள். இராமநாதபுரம் மாவட்டம், அச்சங்குடி தொடக்கப் பள்ளியில் தனது மகள் கீர்த்திகாஸ்ரீ மூன்றாம் வகுப்பு படித்து வருவதாகவும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் காலை 8 மணிக்கே பள்ளிக்கு சென்று விடுவதாகவும், காலை உணவு நன்றாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் திரு.த.மோகன், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications