TN Election Exclusive: சங்கரன்கோவில் தொகுதிக்கு விருப்பமனு! சீட் ரேஸில் முத்துச்செல்வி Vs ராஜா!
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனித் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்க பலரும் முட்டி மோதுவதால் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் திமுகவில் யாருக்கு சீட் வழங்க அதிக வாய்ப்புள்ளது, யார் யார் போட்டியில் இருக்கிறர்கள் என்பது குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாகியுள்ளன. அந்த வகையில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்களிடம் விருப்பமனு பெறும் படலம் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனித் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க திமுகவில் பலரும் ஆர்வம் காட்டினாலும், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி மற்றும் சிட்டிங் எம்எல்ஏ ராஜா ஆகிய இருவருக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. முத்துச்செல்வியை பொறுத்தவரை சங்கரன்கோவில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கரலிங்கத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய முத்துச்செல்வி 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் மூலம் எம்எல்ஏவாக வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் திமுகவில் இணைந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது.
கனிமொழியும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் தனக்கு சீட் பெற்றுக் கொடுப்பார்கள் என நம்பிக்கை வைத்துள்ளார். மற்றொரு புறம் சிட்டிங் எம்எல்ஏவும் மாவட்டச் செயலாளருமான ராஜா மீண்டும் சீட் வாங்க காய் நகர்த்தி வருகிறார். இதற்கு மத்தியில் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு பதிலாக சங்கரன்கோவில் தொகுதியை மதிமுக இந்த முறை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காரணம் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி சங்கரன்கோவில் தொகுதிக்குள் வருவது கவனிக்கத்தக்கது. அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமிக்கு மீண்டும் ஜாக்பாட் அடிக்கும் எனத் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications