அமுதம் அங்காடிகளில் மலிவு விலையில் துவரம் பருப்பு விற்பனை.. அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: அமுதம் பல்பொருள் அங்காடிகள், நியாய விலைக் கடைகளில், வெள்ளிக்கிழமை முதல் கொள்முதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, வெங்காயம், துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெங்காயம், தக்காளி, காய்கறிகள் விலை விண்ணை எட்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பருப்புகள், எண்ணெய்களும் உச்சத்தை தொட்டுள்ளது. அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக காங்கிரஸ் கட்சி போராட்டம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. காய்கறிகளை கீழே கொட்டி ஆளும் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

திமுக அரசுக்கு எதிராக வரும் 20ஆம் தேதியன்று அதிமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்வால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பணவீக்கத்தால் விலை உயர்ந்துள்ளதாகவும், விலை உயர்வு நிலைமையை மேலும் மோசமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் அனைவருக்கும் அரிசி மற்றும் கோதுமை பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுவதாகவும், சில உணவு பொருட்களை கொள்முதல் செய்ய ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உணவு பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கடந்த வாரம் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் 300 ரேசன்கடைகளில் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்யவும், நடமாடும் காய்கறி கடைகளை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில், வெள்ளிக்கிழமை முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில், தக்காளி 1கிலோ ரூ.60க்கும், துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய உணவுத்துறை திட்டமிட்டுள்ளது. குறைந்த விலை பருப்பு விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. சென்னையில் 20 அமுதம் விற்பனை அங்காடிகளில் மலிவு விலை பருப்புகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு கிலோ துவரம்பருப்பு 200 ரூபாய்க்கும் உளுந்தப்பருப்பு 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட போது ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், உளுந்தப்பருப்பு 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறைந்தாலும் ரேசன் கடைகளில் பருப்பு விற்பனை செய்யப்படுவது நீடித்தது. கடந்த சில ஆண்டுகாலமாகவே ரேசன் கடைகளில் உளுந்தப்பருப்பு விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. பல ஆண்டுகாலமாகவே ரேசன் கடைகளில் துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் ரேசன்கடைகளில் உளுந்தம் பருப்பு விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது பொதுமக்களின்கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications