பெண்களின் பாதுகாப்பு.. பணியிடங்களில் புகார் குழுக்கள்... ஹைகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
சென்னை: தமிழ்நாட்டில் பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன என மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
உலகம் முழுவதும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் அவ்வப்போது பல்வேறு உறுதியான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த பிரச்னைகள் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவை பொறுத்த அளவில், மிகப் பெரிய நிறுவனங்களில் பணியிடங்களில் நிலுவையில் உள்ள பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 101 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புகார் நிலுவையில் இருப்பதற்கான காரணம், ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய புகார்கள் குவிவதே ஆகும். இது பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும் குழுக்கள் எந்த அளவுக்கு மெதுவாக செயல்படுகிறது என்பதை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். பாலியல் புகார்கள் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அதேபோல, அவர்கள் மீது போலீஸ் வழக்கும் பதிவு செய்யப்படும்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பஞ்சாலைகள், டெக்ஸ்டைல் மற்றும் ஸ்பின்னிங் மில்களில் பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி வருவதாக கூறி ஈரோட்டைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார். இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு மார்ச் 22 தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில், பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக நலத் துறை செயல்பாட்டு துறை ஆகவும், மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்டத்தில் இச்சட்டத்தை செயல்படுத்தும் செயல்பாட்டு அலுவலர்களாகவும் உள்ளனர்.
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படுத்தும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 இன் படி, அனைத்து அலுவலகங்களிலும் உள்ளக புகார் குழு (ICC) நிறுவப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் புகார்க் குழுவை (LCC) அமைக்கும் மாவட்ட அலுவலர்களாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications