சென்னை கூவத்தில் 13,514குடும்பங்களை அகற்றிவிட்டோம்..பேலன்ஸ் 743 தான்! ஐகோர்டில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை: சென்னை கூவம் நதிக்கரை ஓரம் வாழ்ந்து வந்த 13,514 குடும்பங்களை அப்புறப்படுத்திவிட்டதாகவும் மீதம் 743 குடும்பங்கள் மட்டுமே இருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் நீர் நிலையோரம் வசிக்கும் குடிசைப்பகுதி மக்கள், புறம்போக்கு நிலங்கள் குடியிருப்புகள் அமைத்து காலம் காலமாக வாழ்ந்து வருபவர்களை சமயத்திற்கு ஏற்ப அரசு அப்புறப்படுத்தி அவர்களை வேறு இடங்களில் மறு குடியமர்த்தும் பணியை மேற்கொள்கிறது. ஆனால், சென்னையின் மையப் பகுதியில் தொன்றுதொட்டு வாழும் பூர்வக் குடிமக்களையும் மீனவர்களையும் சம்பந்தமே இல்லாத சென்னைக்கு பல மைல்கள் தொலைவில் உள்ள கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் அரசு குடியமர்த்துவதாகவும், இதனால் அந்த மக்களின் வாழ்வாதாரம், குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், மறு குடியமர்த்துவது தொடர்பான அரசின் கொள்கைகள், சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் நகர்புற பாதிக்கப்பட்டோர் தகவல் மற்றும் ஆதார மையத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறு குடியமர்த்தப்படும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், கல்வி பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அரசுத் தரப்பில், சென்னையில், கூவம் நதிக்கரையில் ஆக்கிரமித்து வசித்த 14 ஆயிரத்து 257 குடும்பங்களில், 13 ஆயிரத்து 514 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வேறு இடங்களில் மறு குடியர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சட்டப்படி அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க உத்தரவிட்டனர். மேலும், கல்வி உரிமைச் சட்டப்படி, கல்வி பெறுவது அடிப்படை உரிமை எனவும், அடிப்படை கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்த நீதிபதிகள், மறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications